Tuesday, 21 January 2020

கெடுத்தது எது?

ஒருவருக்கு தேதி குறித்து விட்டால்? அந்த தேதியில் அவர் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்வார்கள்!

அப்படி ஒரு சிற்பிக்கு எமன் தேதி குறித்து விட்டார்! அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரிந்து விட்டது!

சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை!

எமன் ஒருமுறைதான் பாசக்கயிறை வீசுவார்! அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்!

அதனைப் பயன்படுத்திக் கொள்ள சிற்பி ஒரு யுக்தி செய்தார்!

தன் திறமையை எல்லாம் காட்டி தன்னைப் போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார்! 

எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்து விட்டு அதன் நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக் கொண்டு விட்டார்!

எமன் வந்தார், பார்த்தார்! சற்றே திகைத்துப் போனார்!

மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டு மட்டும்தான் சிலைகள் என்பதை யூகித்துவிட்டார்!

ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை! அவ்வளவு நேர்த்தி!

தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே?

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது!
யோசித்தார்; ஒரு யோசனை வந்தது!

சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், "அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது! என்னாலேயே எது சிலை எது மனிதன் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே?" இப்படி சொல்லி விட்டு மூன்று சிலைகளையும் எமன் உன்னிப்பாக கவனித்தார்!

அவர் எதிர்பார்த்தது நடந்தது!

நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது!

தற்பெருமைதான், வேறென்ன? சடாரென வீசினார் கயிற்றை!

கெடுத்தது எது?

நான் என்ற தேகாபிமானத்தில் வீழ்ந்து விடுவதுதான் கொடுமை!

ஈகோ, எதிர்பார்ப்புகள், புகழுக்கு மனம் இலயித்துப் போவது தான் மனித மனதின் பலவீனம்!

கடவுள் எங்கே ?

பதினைந்து இராணுவ வீரர்கள் மற்றும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் மூன்று மாத காலம் பணி புரிய சென்று கொண்டிருந்தார்கள்.

மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும், இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப்படுத்தியது.

இந்நேரத்தில், யாராவது ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது.

ஆனால் அது ஒரு வெற்று ஆசை என அறிந்ததும், அதை பொருட்படுத்தாமல், ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு மிகச்சிறிய கடை ஒன்றை கண்டார்கள்.

அது ஒரு தேநீர் கடைப்போலவே இருந்தது. ஆனால் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.

அதிர்ஷ்டம் இல்லை, தேனீர் இல்லை.

ஆனாலும் நாம் சில நிமிடம் ஒய்வெடுக்கலாம். நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கிறோம் என்றார் மேஜர்.

அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார்,
"சார், இது ஒரு தேனீர் கடை தான், உள்ளே தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும், நாம் பூட்டை உடைக்கலாமே.." என்றார்.

இது ஒரு தர்மசங்கடமான நிலை மேஜருக்கு, 'தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்கு தேனீர் கொடுக்க பூட்டை உடைப்பதா..? அல்லது இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தை செய்யாமல் இருப்பதா..?' என்று குழம்பினார்.

சிறிது நேரம் கழித்து, அவர் அறிவை விட அவரின் மனம் ஜெயித்தது.

வீரர்களிடம் பூட்டை உடைக்கச் சொன்னார். 

அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே தேனீர் தயாரிக்க அனைத்து பொருட்களும் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டுகளும் இருந்தது.

அனைவரும் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளை நன்றாக சாப்பிட்டு விட்டு புறப்பட தயாராகினார்கள்.

நாம் இந்த கடையின் பூட்டை உடைத்து தேனீர் மற்றும் பிஸ்கெட் உண்டோம், நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல, இது ஒரு சூழல், நாம் இந்த தேசத்தை காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள். இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க...

மேஜர், ஆயிரம் ரூபாயை தன் பர்ஸில் இருந்து எடுத்து, அங்கு இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு, கதவை மூடி விட்டு.., தன் குற்ற உணர்ச்சி துறந்து, புறப்பட்டார்...

அடுத்த மூன்று மாத காலத்தில், அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்கு உள்ளாகக்கூடிய அவ்விடத்தில் பணியாற்றினார்கள்.

அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது.

அதே வழியில் அவர்கள் திரும்ப, அதே தேனீர் கடை... 

ஆனால் இப்பொழுது அது திறந்திருந்தது.

அதன் முதலாளியும் இருந்தார்.

ஒரு வயதான அந்த கடை முதலாளி, தீடீரென்று தனக்கு கிடைத்த அந்த பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச்சொன்னார்.

எல்லோரும் தேனீரும் பிஸ்கெட்டும் உண்டு களித்தனர்.

அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்வான இடத்தில் தேனீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கை சூழல் பற்றியும் பேசினர்.

அவரிடம் பல அனுபவ கதைகள் இருந்தது. மிகவும் நிறைந்த நெஞ்சுடன், கடவுள் பக்தியும் இருந்தது.

ஒரு வீரர் கேட்டார், தாத்தா.. கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உங்களை இப்படி, இங்கே, இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்..? என்று.

"அப்படி சொல்லாதீர்கள் தம்பி... 
கடவுள் நிச்சயம் இருக்கிறார்.. 
அதற்கு என்னிடம் சான்றே இருக்கிறது. மூன்று மாதம் முன்பு, சில தீவிரவாதிகளால், எனது மகன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டான். 

நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனை கூட்டிச்சென்றேன். அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை. 

தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் எனக்கு கடன் கொடுக்கவும் வரவில்லை. என் நம்பிக்கை ஈற்று போய்விட்டது... 

கடவுளிடம் கதறி அழுதேன்...

ஐயா கனவான்களே, கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார். நான் அழுது ஆற்றிக்கொண்டு என் கடையை வந்தடைந்த பொழுது, என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன். 

அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது.

உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

'கடவுள் இருக்கிறார்' என்பதற்கு இதை விட நான் என்ன சொல்ல...? என்று முடித்தார் அவர்.

அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது.

அந்த பதினைந்து ஜோடிக்கண்களும் அந்த மேஜரின் ஒரு ஜோடிக்கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன.

அந்த ஒரு ஜோடிக்கண், எதையும் சொல்லாதீர்கள் என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை, அவர்கள் உணர்ந்தார்கள்.

அந்த மேஜர் எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்.

அந்த முதியவரை தழுவிக்கொண்டு "ஆம் தாத்தா, எனக்கும் தெரியும்.. கடவுள் இருக்கிறார்.. தாத்தா.. உங்கள் தேனீர் மிக அபாரம்.."  இதை அவர் சொல்லும் பொழுது, அவர் கண்களின் ஓரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து ஜோடிக்கண்களும் பார்க்க தவறவில்லை.

யாரும் யாருக்கும் கடவுளாகலாம்...

அன்னக் குஞ்சுகளும் திருதராஷ்டிரனும்

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.

கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்...

நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சமைப்பது, அவரை பிரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா இப்போது சொல் என்றார் கிருஷ்ணன்..

அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார். ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே!

சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய்.

அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான்சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய். ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.

நன்றி தினமணி.