Thursday, 30 July 2020

கோபம்

ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார்.

கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை.மாறாக, ஆத்திரத்தில், "நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் அவனை என் முன் நிறுத்த வேண்டும்" என்று கேட்டான்.

அதற்கு கடவுள், "பக்தா! மானை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மான் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் யார் என்று கேட்காதே" என்றார்.

"கடவுளே! நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை பழிவாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை இங்கு வரவழைக்க வேண்டும்" என்று பிடிவாதமாக கேட்டான்.

இதனைக் கேட்ட கடவுள், "சரி. நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது" என்றார். அந்த மனிதரும் சரி என்றார்.

"தந்தேன் நீ கேட்ட வரத்தை. இந்த மானை திருடிச் சென்றவர் உன் பின்னால் நிற்கிறார்", என்று பக்தனிடம் கூறினார் கடவுள்.

உடனே பக்தன் திரும்பிப் பார்த்தான். மிகப் பெரிய சிங்கம் நின்று கொண்டிருந்தது.

சிங்கத்தைப் பார்த்தவுடன், பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. "அய்யோ கடவுளே காப்பாற்று!" என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார் பக்தர்.

நம்மில் பலருக்கு ஆத்திரத்தில் அறிவும் – புத்தியும்  வேலை செய்வதில்லை. ஆத்திரம் பெரும்பாலும்  அழிவைத் தருகிறது.

ஆத்திரம் , கோபம்  தவிர்த்து அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திட
இந்த நாள் இனிய நாளே....
இனிய  மாலை வணக்கம்

திருக்குறள் அறத்துப்பால்

அறத்துப்பால் / அவாவறுத்தல்

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

ஆண்டும் அஃதொப்பது இல்
 அவா அற்ற நிலை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகத்தில் இல்லை.ஏ எங்குமே அதற்கு நிகரானது வேறு இல்லை.

Wednesday, 29 July 2020

மண் தந்த உறவுகள்

களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர் என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜீனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான். 

பிதாமகரை அத்தனை எளிதாய் வீழ்த்திவிட்டானா அர்ஜீனன் ?.. என கோபப்பட்டான் கர்ணன்.

இல்லை. சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை வீழ்த்திவிட்டார்கள்.. என்றான் தகவல் கொண்டுவந்த வீரன்.

அதர்மத்தின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று எங்களை குறைகூறிய பாண்டவர்களே, அதர்மத்தினைக் கையாளுவதுதான் தர்மமா ?

அர்ஜீனா.. இதோ வருகிறேன். சந்திக்கிறேன் உன்னை களத்தில். உன்னைக் கொல்லவேண்டும் என நான் நினைத்ததற்கான காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கூடிக்கொண்டே போகின்றன.. என தனக்குள் பொங்கினான். 

இறுதியாக ஒருமுறை, பீஷ்மரின் திருமுகத்தைக் கண்டுவரக் கிளம்பினான் குருஷேத்திரம் நோக்கி.

கௌரவர் சேனையும், பாண்டவர் சேனையும் அணிவகுத்து நின்று, ஒவ்வொருவராய் பீஷ்மரைக் கண்டு கலங்கியபடியே நகர்ந்தார்கள் களத்தில். போதும் புறப்பட்டுவிடலாம் என நினைத்த பீஷ்மம், தனது தாயின் மடியினைத் தேடியது. தாய் தந்த அமுதோடு உயிர்கொண்டோம். அதோடே, உயிர் துறப்போம் என்று எண்ணிய பீஷ்மர், அர்ஜீனனை அருகில் அழைத்தார்.

அர்ஜீனா.. தாகம் அதிகம். இதுவரை கொண்ட அத்தனை தாகத்தினையும் மறக்கச் செய்யும் அதீத தாகம். என் தாய் கங்கையால் மட்டுமே தீர்க்கமுடிந்த தாகம். தீராமல், இவ்விடம் விட்டு நகர்தல் என்பது இயலாது. புரிகிறதா ?.. என்றார்.

அர்ஜீனனின் கண்கள் கண்ணனை நோக்க, அவனும் தலையசைக்க, தனது பாணங்களை நிலம் நோக்கி செலுத்தினான் அர்ஜீனன். நிலம் பிளந்து, பாறைகள் தாண்டி, ஆழத்தில் பயணித்துக் கொண்டிருந்த கங்கையினை தொட்டது அர்ஜீனனின் அம்புகள். 

அம்பு பயணித்த இடைவெளியின் ஊடே, பீஷ்மரின் சுவாசமும் கலந்து பயணிக்க, சீறி எழுந்தாள் கங்கை. கிடைத்த இடைவெளியில் பொங்கி வழிந்து ஊற்றாய் பெருகி, பாலாய்ப் பொழிந்தாள். மண்தொட்டு கிளம்பிய கங்கை, நேராக, தன் மகனின் தாகம் தீர்க்கத் தாயாக மாறி, பாலூட்ட ஆரம்பித்தாள் பிதாமகர் பீஷ்மருக்கு.

கங்கை உள்நிரம்பியதும், வெம்மையாய் இருந்த கொஞ்ச நஞ்ச எண்ணங்களும் குளிர்ந்துபோக, 

போதும் தாயே போதும். கொண்டதொரு பணி நிறைவாய் முடிந்தது. விடைகொடு எனக்கு.. என்று மனதாலேயே தன் தாயை வணங்க, கங்கை அடங்கினாள். 

பீஷ்மத்தைப் பெற்றதனால், புனிதமானாள் கங்கை என நாளைய சரித்திரம் சொல்லுமடா உன் பெயரை.. என வாழ்த்தினாள்.

பீஷ்மரின் கண்கள் விண்ணை நோக்கின. தேவர்களும், விண்ணவர்களும் புடைசூழ நிற்பது கண்டு வணங்கினார். சூரிய தேவனுக்கு அருகிலேயே, மரண தேவனும் தன் அனுமதிக்கு காத்திருப்பது தெரிந்தது.

வாரும் மரணதேவரே.. வாரும். இதுநாள்வரை உம் கடமை நிறைவேற்றத் தடையாயிருந்தமைக்கு மன்னியும் என்னை. நானே அழைக்கிறேன் உம்மை. வந்தெம்மை ஆட்கொள்ளும்.. என பீஷ்மரின் மனம் இறைஞ்சியது.

சற்றுப் பொறும் பீஷ்மரே. இருக்கும் அத்தனை பேரையும் விருப்பு வெறுப்பின்றி ஆசீர்வதித்து செல்கிறீரே.. வந்து கொண்டிருக்கிறான் எம் மைந்தன். அவனையும் ஆசிகொடுத்துவிட்டுச் செல்லாமே.. வேண்டினான் சூரியதேவன்.

அதேநேரம், கர்ணனும் நுழைந்தான் அவ்விடம். அம்புப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த பீஷ்மரைக் கண்டதும் ஆடிப்போனான் கர்ணன். மனம் கலங்கியது. அவரை எதிர்த்து உதிர்த்த வார்த்தைகள் நினைவில் வந்து நெஞ்சினைக் கிளறியது. அவரது கால் தொட்டு வணங்கினான். அருகே சென்றான்.

பிதாமகரே.. அறியாமல் கோபத்தில் நான் உதிர்த்த வார்த்தைகள், உம்மைக் காயப்படுத்தியிருப்பின் மன்னியுங்கள் என்னை... என்றான் கர்ணன்.

தவறான புரிதலால் ஏற்பட்ட விளைவிற்கு காரணமாக எதையுமே கற்பிக்க இயலாது கர்ணா.. இதோ.. நீ விரும்பியது காத்திருக்கிறது. நாளைமுதல் நான் களத்தில் இருக்கப் போவதில்லை... என்றார் பீஷ்மர்.

அவசரப்பட்டு பேசிவிட்டேனோ என்று அதற்காகப் பலமுறை வருந்தியிருக்கிறேன் பிதாமகரே. உம்மோடு களம்புகுந்து, பார்போற்றும் உமது வீரத்தினை அருகிருந்து காணும் கொடுப்பினை கிட்டியும், அவசரப்பட்டு தவறவிட்டுவிட்டேனே என வருந்தாத நாளில்லை ஐயனே.. என்றான் கர்ணன் உருக்கமாக.

எல்லாம் நன்மைக்கே கர்ணா.. என் இடத்தை நிரப்பாமல் செல்கிறேனே என்ற கடைசிக்குறையும் தீர்ந்தது உன்னால். களம் காண்பாய் கர்ணா.. என்றார் பீஷ்மர்.

நீங்கள் இட்ட பணி தொடர, வெற்றி பெற வாழ்த்தியருள வேண்டுகிறேன் பிதாமகரே.. என்றான் கர்ணன்.

எவரும் பெறமுடியாத புகழினை இக்களத்தினில் நீ பெறுவாய் கர்ணா.. உன் தர்மம் அதற்குத் துணைநிற்கும்.. என கர்ணனை ஆசீர்வதித்த பீஷ்மர், கண்மூட ஆரம்பித்தார். 

மனதாலேயே மரணதேவனை ஆட்கொள்ள அழைக்க, பீஷ்மரின் ஆன்மாவினை தனதாக்கிக் கொண்டான் மரணதேவன். உடல் மட்டுமே உயிர்ப்போடு இருந்தது.

விண்ணெங்கும், மண்ணெங்கும் பீஷ்ம.. பீஷ்ம..பீஷ்ம.. என்னும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

கலங்கிய கண்களோடும், கனத்த இதயத்தோடும் செய்வதறியாது நின்ற அர்ஜீனனை அவ்விடம் விட்டு சற்று தூரமாய் அழைத்துவந்தான் கண்ணன். 

இழப்பின் வலி என்னவென்பதை பிதாமகர் உணர்த்திப் போனபின்பும், மண்ணிற்கான இப்போர் தொடரத்தான் வேண்டுமா கண்ணா ?.. கலங்கியபடியே கேட்டான் அர்ஜீனன்.

பீஷ்மர் ஆவது அத்தனை எளிதென்று எண்ணிவிட்டாயா அர்ஜீனா ?.. கேட்டான் கண்ணன்.

நான் கேட்பது என்ன ? நீ சொல்வது என்ன ?.. எரிச்சலோடு கேட்டான் அர்ஜீனன்.

புரிந்துகொள்ளும் மனநிலையில் நீயில்லை எனப் பொருள் அர்ஜீனா.. என்றான் கண்ணன்.

என்ன புரியவில்லை ? இன்னும் என்ன புரியவேண்டும் ? எவர் பார்த்து இவர்போல் ஆகவேண்டும் என நினைத்தேனோ, அவரை என்னைக் கொண்டே வீழ்த்த வைத்தது புரியவில்லையா எனக்கு ? மனம் முழுதும் நிறைந்திருந்த பிதாமகரை, மண்விட்டு அனுப்ப, காரணமாகிப் போனேனே நான்.. இதுகூடவா எனக்குப் புரியவில்லை ?.. படபடத்தான் அர்ஜீனன்.

பீஷ்மர் மண்விட்டுப் போய் வெகுகாலமாகிவிட்டது அர்ஜூனா... என்றான் கண்ணன்.

திகைப்பாய்ப் பார்த்தான் அர்ஜீனன்.

ஆம் அர்ஜீனா.. மண்ணாள மட்டும் பீஷ்மர் நினைத்திருந்தால், தடுப்பார் எவருமில்லை அன்று. மண்ணோடு தன் தொடர்பை என்றோ விட்டொழித்தார் பீஷ்மர். அதனாலேயே, தன் சுக துக்கங்களை அவரால் மறக்க முடிந்தது. தன்னைப் பற்றிய நினைவே இன்றி, தம் குலத்திற்காக மட்டுமே வாழ்வினை அர்ப்பணிக்க முடிந்தது.

பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது அர்ஜீனா.. விருப்பு, வெறுப்பின்றி எதனையும் அணுகமுடிவதே பீஷ்மம். 
கொண்ட கொள்கைக்காக, தனைப்பற்றிய சிந்தனையே இன்றி, தொடர்ந்து கடமையாற்றுவதே பீஷ்மம்.

பீஷ்மரின் கொள்கை தன் குலம் காத்து நிற்பது மட்டுமே. அதற்கு எது சரியோ, அதை மட்டுமே சிந்தனையில் கொள்பவர். அது சரியா, தவறா என்றுகூட யோசிக்கமாட்டார். தன் நிலை தாழ்ந்தாலும் கவலைப்படாமல், தன்னை நம்பியிருக்கும் தன் குலம் காப்பவர் எவரோ.. அவரே பீஷ்மர். அதற்காக, அவர் கைக்கொண்ட தவம்தான் பிரம்மச்சர்யம்.

மண்ணிலிருந்து தன்னை விலக்கிக் கொள்பவனால் மட்டுமே பீஷ்மனாக முடியும்.. என்றான் கண்ணன்.

பஞ்சபூதங்களில் ஒன்றுதானே இம்மண். அதை மட்டும் விட்டு விலகிநின்றால் போதுமா ?.. கேட்டான் அர்ஜீனன்.

நீர், நெருப்பு என இரண்டையும் தன்னுள் அடக்கி, தன்னைத் தொட்டே தன் பலத்தினை நிரூபிக்க முடியும் என வாயுவிற்கும் வாய்ப்பளிக்கும் மண்ணை அத்தனை சாதாரணமாக எண்ணிவிடாதே அர்ஜீனா. இங்கு அனைத்திற்கும் காரணம் மண்தான். மண்தொட முடியாத ஒரே விஷயம் ஆகாயம் மட்டுமே. அதுவும், இறப்பிற்கு பின்மட்டுமே அடையமுடியும் இடம். 

உலகின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் நிற்பது மண் மட்டுமே. மனிதப்பிறவியின் அசைக்கவே முடியாத, விடவே இயலாத, ஆழமான ஓர் உணர்வு ஆசை. அந்த ஆசையின் அஸ்திவாரமே மண்தான்.

கருவில் இருக்கும்வரை, மண்ணோடு தொடர்பில்லை. வெளியில் வந்தபின்னும், தாய்மடியில் இருக்கும்வரை, தனக்கென்று ஓர் தனித்த சிந்தனை இருப்பதே இல்லை எந்தக் குழந்தைக்கும். எப்போது குழந்தை என்ற ஓருயிர், மண்தொட ஆரம்பிக்கிறதோ.. அப்போது நுழைகிறது அதனுள் ஆசை. 

தான் படுத்திருக்கும் இடம் தன் இடம். அதுமட்டும் போதுமா ? போதாது. உள்நுழைந்த ஆசை விட்டுவிடுமா என்ன ? புரள்கிறது குழந்தை.. இன்னும் இடம் கிடைக்கிறது. அதுவும் தன் இடம் என்றபின், முன்னோக்கி நகர்கிறது.. தவழ்கிறது இடம் பிடிக்க. 

அதுவும் போதவில்லை. கண்படும் இடமெல்லாம் தனதாகவேண்டுமே.. எழ முயற்சித்து தொட நினைக்கிறது.. எழுகிறது.. நடக்கிறது.. ஓடுகிறது.. இத்தனை இடம் கிடைத்தும் போதவில்லை. மண் மட்டும் போதுமா ? மண்மேல் இருக்கும் அத்தனை சுகங்களும் வேண்டும்.. ஓடுகிறது.. தேடுகிறது.. வாழ்நாள் முழுதும் தேடியே ஓய்கிறது. 

முதுமையில் தளர்ந்து மறுபடியும் மண்மேல் விழும்வரை ஓய்வதில்லை. எல்லாம் ஓய்ந்தபின்னே, உயிர்பிரிந்து போனபின்னே, மண்ணால் வந்த மனிதனின் ஆசை, மண்ணுக்குள்ளேயேதான் புதைக்கவும் படுகிறது. இத்தனைக்கும் காரணமான இம்மண்ணை மட்டும், அத்தனை எளிதாய் எவராலும் துறக்க முடியாது.

வாழும் காலத்திலேயே, மண்ணாசையை.. மண்ணால் கொண்ட உணர்வுகளை துறந்து நின்றதால்தான் அவர் பீஷ்மர்.. என கண்ணன் கூறியதைக் கேட்ட அர்ஜீனன் திகைத்தான். அதனால்தான், மண்படாது பீஷ்மரை அம்புப் படுக்கையில் ஏற்றச் சொன்னாயா கண்ணா ?.. விழிகள் விரியக் கேட்டான் அர்ஜீனன்.

சரியான புரிதல்தான் அர்ஜீனா. 

பிதாமகர் பீஷ்மர் வாவென்றழைக்காமல், மரணதேவனால் அவரை நெருங்கக்கூட இயலாது. வாழும்போது மண்ணோடு தான் கொண்ட உறவறுத்து வாழ்ந்த பீஷ்மர், இறுதி நேரத்தில் மண்மீது விழுந்துவிட்டால், மண் அவரை விட்டுவிடுமா என்ன ? மறுபடியும் வாழவேண்டும் என்ற ஆசைதனை அவருள் புகுத்திவிட்டால் ?.. 

மீண்டும் எழுந்து, பீஷ்மம் மறந்து, மண்ணாள ஆசை கொண்டுவிட்டால். ? 
உன்னால், என்னால், எவராலும் அவரை தடுத்து நிறுத்திட இயலாது என்பதால்தான் அம்புப் படுக்கையில் கிடத்தச் சொன்னேன்.

ஒருவேளை, அதிலிருக்கும்போதும், மண்தொட அவர் விரும்பினாலும், அம்புகள் குத்தி நிற்கும் உடலின் வலி அதிகரிக்கும்.

மண்தொட ஆசைப்பட்டால், வலிதான் மிஞ்சும் என்பதாலேயே, மறந்தும் கூட அவர் அதனை செய்ய மாட்டார். அதனாலேயே, இறுதிவரை அவரை மண் பார்க்க விடாமல், விழிகளை விண்நோக்கியே இருக்கச் செய்தேன். 

பீஷ்மர் தவறலாம் அர்ஜீனா.. அவர் கொண்ட பீஷ்மம் தவறிவிடக்கூடாது.. என்றான் கண்ணன்.

இத்தனையும்தான் நானறிந்து கொண்டேனே ? மண் வேண்டாம் என என்னால் போரிடாமல் விலக முடியாதா ?.. ஆதங்கத்தோடு கேட்டான் அர்ஜீனன்.

சிரித்தான் கண்ணன். 
நீ நிற்பதே மண்மீதுதான். உன் இருப்பே மண்மீதுதான் என்றபின், விலகி எங்கு செல்ல முடியும் அர்ஜீனா ? விண் நோக்கிச் செல்ல, உனக்கான காலம் இன்னும் வரவில்லை என்றபின், மண்ணில்தான் போராடவேண்டும். மண்ணோடுதான் போராடவேண்டும்.. மண்ணிற்குள் மறைந்து மண்ணாகும்வரை.. என்றான் கண்ணன்.

அர்ஜீனனுக்குப் புரிந்தது. 
மண்ணில் கலக்கத்தான் இத்தனை போராட்டங்களும்.. மண்ணாக மாறத்தான் இந்த ஓர் பிறவியும். நாம் கொண்ட சுகங்களும், துக்கங்களும் மண்ணால்தான் அருளப்பட்டது. அதை அடையத்தான் இந்த வாழ்க்கைப் போராட்டமும். 

எதை வெல்ல நினைத்தோமோ, அதில்தான் அடங்கப் போகிறோம். இங்கு நாம் கண்ட உறவுகள் அத்தனையும், இந்த மண் தந்ததுதான். உறவுகளையும், உணர்வுகளையும் கொடுத்த மண்தான், அவைகளை திரும்பவும் பெற்றுக் கொள்ளப் போகிறது. 

எனில், நான் என்பது யார் ? நான் என்பதும் அதுதான்.
இதைப் புரிந்து கொள்ளவே வாழ்க்கை. புரிந்தாலும், புரியாவிட்டாலும், தான் யார் என்பதை மண் புரியவைத்துவிடும்.

அர்ஜீனன், தர்மன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், கர்ணன், துரோணன் என எல்லாம் ஒன்றுதான். அத்தனை பேரும், விரைவாய் மண்ணோடு கலக்க, போராடும் களமே வாழ்க்கை. எவர் முந்துகிறார் என்பது மட்டுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

வா கண்ணா.. நாளைய போருக்கு தயார் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு.. என அர்ஜீனன் கூற, கண்ணனுக்குப் புரிந்தது.. தன்னை எவரென உணர்ந்துவிட்டான் அர்ஜீனன் என்பது.

இங்கு ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே.. ஒவ்வொருவரும் அர்ஜீனரே. விளங்கச் சொல்ல, கண்ணன் எனும் சாரதி ஒவ்வொருவர் உள்ளும் உண்டு. 

வாழும்போதே அதை உணர்ந்தது, பீஷ்மரைத் தவிர வேறு எவரும் இல்லை.

Saturday, 25 July 2020

தியான் சந்த் சிங்


      நமது தேசத்தின் சின்னங்கள் பறவை விலங்கு இவையாவும் நாம் அறிவோம். நமது நாட்டின் தேசிய விளையாட்டு தினம் எது என்று நாம் அறிந்து கொள்வோம். ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி ஆகும். அன்று என்ன அவ்வளவு சிறப்பு? அன்றுதான் பத்மபூஷன் விருது பெற்ற உலகப் புகழ்பெற்ற ஹாக்கி வீரர் ,பாரதத்தின் "தியான் சந்த்"  பிறந்த தினம்.

 அப்படி சிறப்பு என்ன?
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த சோமேஸ்வரர் தத்சிங்  என்ற வீரரின் மகனாக பிறந்த தியான்சிங்,  அவரது குடும்பத்தின் மற்ற சகோதரர் போல் ராணுவத்தில் சேர்ந்தார். ஹாக்கி விளையாட்டு ராணுவத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தது. தியான் சிங்கும் ஹாக்கி விளையாட வேண்டியிருந்தது .

     சிறுவயதில் அவருக்கு மல்யுத்தத்தில் தான் நாட்டம். ஆனால் இப்பொழுது ஹாக்கி விளையாட வேண்டி இருந்தது. ஆகவே தனது பணி நேரம் முடிந்த பின் நீண்ட நேரம் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். இரவுகளில் நிலா ஒளியில் நீண்ட நேரம் பயிற்சி செய்வார். அப்போது பந்தை நன்றாகப் பார்க்கும் திறன் வரும் என்று அவருக்கு புரிந்தது. இவ்வாறு அவர் செய்வதை பார்த்து அவருடைய பயிற்சியாளர் அவருக்கு சந்த்(chand )நிலா ஒளி என்று பெயரிட்டார்.

     அது முதல் அவருக்கு தியான் சந்த் என்ற பெயர் நிலைத்துவிட்டது. தனக்கு பழக்கம் இல்லாத ஹாக்கி விளையாட்டு என்றாலும் முழு பயிற்சி பயிற்சி மூலம் தன்னை அதிக திறன் உள்ளவராக ஆக்கிக்கொண்டார் தியான்சந்த். நாமும்  ஷாகாவில் அதிக பயிற்சி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை அறிவோம்.

  அவரது அதீத திறமை காரணமாக ராணுவத்தின் அவரது பிரிவு அவரை அனைத்து ஹாக்கி விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்பி வைத்தது. அவரும் நாட்டுக்குள் நடக்கும் எல்லா இடங்களுக்கும் சென்று சிறப்பாக ஆடி வந்தார்.

  முதல்முறையாக 1928ஆம் ஆண்டு ஹாக்கியை ஒலிம்பிக் விளையாட்டில் சேர்த்தார்கள். அந்த ஆண்டு இந்திய குழுவில் தியான் சந்த் மற்றும் அவரது சகோதரர் நீப் சிங் உட்பட இந்திய குழு ஆம்ஸ்ட்ராங்மில்  நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றது. முதல் முறையாக வெளிநாடுகளில் சென்று விளையாட தொடங்கினார். அந்தப் போட்டிகளில் நமது குழுவில் பல வீரர்களுக்கு தொடர்ந்து உடல் நிலை சரி  இல்லாமல் போனது தியான் சந்த் அவர்களுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இருந்தாலும் மனம் தளராது அவர் சிறப்பான விளையாட்டை நடத்திக் காட்டினார். அதன்மூலம் சக வீரர்களுக்கு வெளிநாடுகளிலும் சென்று ஒன்றாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. மேலும் சர்வதேச அளவில் நமது ஹாக்கி குழு மீது மதிப்பு பிறந்தது.

    தியான் சந்த் அவர்களின் புகழ் பரவத் தொடங்கியது. ஆனால் தியான் சந்த் அவர்கள் தன் முழுக்கவனத்தையும் திறன் வளர்ச்சியில் மட்டுமே செலுத்தினார் .நாம் ஆர்வத்தடனும், ஈடுபாட்டுடனும் சங்க வேலை செய்கிறோம். ஆனால் நமது கவனம் நம் திறனை வளர்ப்பதிலே முழுதும் செலுத்தவேண்டும். 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்க ஏற்பாடு ஆகி இருந்தது. அது நாசிச ஆட்சியில் அடாப் ஹிட்லர் தலைமையில் இருந்த ஜெர்மனியில் நடக்க இருந்தது. அலுவல் காரணமாக தியான் சந்த் அவர்களுக்கு பயிற்சி முற்றிலும் கிடைக்கவில்லை. தேர்ச்சி விளையாட்டிற்கு நேரம் அனுமதி அவரது படைப்பிரிவு கொடுக்கவில்லை. ஆனால் நேரடியாக ஒலிம்பிக்கில் விளையாட இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

      அதன்பின் அவர் ஜெர்மனிக்கு குழுவோடு அனுப்பப்பட்டார். அங்கு சென்று எல்லா நேரத்திலும் பயிற்சி மேற்கொண்டு தங்களை எதிர்த்த எல்லா நாட்டு அணிகளையும், அதிக கோல் வித்தியாசத்தில் நமது அணி வெற்றி பெற்று வந்தது. எல்லாவற்றுக்கும் முன் நமது அணியை உற்சாகப்படுத்த தியான் சந்த் அவர்கள் அன்றைய காலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மூவர்ணக்கொடி முன் சபதம் ஏற்பார். மற்ற அணியினரும் அவரோடு சபதம் ஏற்பார்கள். சிறப்பாக விளையாடி நமது அணி இறுதிப்போட்டிக்கு வந்தது. 15 ஆகஸ்ட் 1936 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி அன்று மிகவும் சக்திவாய்ந்த ஜெர்மனியில், அதுவும் அவர்கள் நாட்டில் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியின் கண்முன் நடக்க இருந்தது. இதுவே ஹிட்லருக்கு தனது பெருமையை உலகுக்கு காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்தது. .ஜெர்மனி வெற்றி பெற்று விடும் என்ற இருமாப்போடு  இருந்த நேரம் அது.

 விளையாட்டு தொடங்கியது முதல் காலப்பகுதியில் மிகவும் கடினமான போட்டி நிலவியது. நமது வீரர்களால் கோல் போட முடியவில்லை. ஆனால் ஜெர்மனி ஒரு கோல் போட்டு முன்னிலையில் சென்றது. இரண்டாவது காலப்பகுதியின் போது தனது வேகம் குறைந்து வருவதாக உணர்ந்த தியான் சந்த் அவர்கள் தான் அணிந்த காலணியை(sports shoe) கழற்றிவிட்டு ஆடுகளத்தில் ஓடி விளையாட ஆரம்பித்தார். வேகத்தை அதிகரிக்க ஆரம்பித்தார். அதை பார்த்த மற்ற வீரர்களுக்கு உற்சாகம் பிறந்தது. தியான் சந்த் அடுத்தடுத்து கோல்களைப் போட பாரதம் வெற்றியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. ஹிட்லர் உட்பட ஜெர்மானிய மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்திய அணி 8 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஒலிம்பிக் தங்கத்தை வென்றது.

     தான் ஆடும் களம் எவ்வளவு ஆபத்தானதாக இருந்தாலும், தன் குழு மீதும் தேசத்தின் மீதும் தன் மீதும், முழு நம்பிக்கை மற்றும் பக்தியோடு விளையாடி வெற்றி மட்டுமே லட்சியமாகக் கொண்டு ஒலிம்பிக் தங்கத்தை பெற்றுத் தந்தவர் தியான் சந்த் அவர்கள். நாமும் சங்க வேலை செய்யும்போது கடினமான சூழ்நிலைகள் வரும் ஆனால் தன் திறமை மீது நம்பிக்கை, தன் சக கார்யகர்தர்களுக்கு நம்பிக்கை, தன் தேசத்தின் மீது முழு நம்பிக்கையோடு வெற்றியை லட்சியமாகக் கொண்டு வேலை செய்தால் சிறப்பான வெற்றி கிடைக்கும் என்பது தியான் சந்த் அவர்கள் வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்கிறோம். அவர் தன் திறமையை வளர்த்துக்கொள்ள செய்த சில முயற்சிகள்

1. போசிஷன் மட்டும் இல்லாமல் ஆடுகளத்தில் முழு நீள அகலத்தில் ஓடி செல்வார் அதன் மூலம் எதிரணியின் நிறை குறைகளை அறிந்து கொள்வார்.
 
2. ஹாக்கி மட்டையை விட்டு பந்து வெளியே செல்லாமல் இருக்கும் அளவிற்கு (dribbling) என்ற முறையை அதிகம் பழகுவார். ஒருமுறை நெதர்லாந்து  நாட்டினர்  அவருடைய மட்டையை வாங்கி அதில் காந்தம் உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர்.

3. கோல் சரியாக போடுவதற்கு ஒரு காலிடயர்  வைத்து அதனுள் பந்தை அடிக்க அதிக பயிற்சி எடுப்பார். அதன் மூலம் குறி மாறாமல் அடிக்கும் தன்மையை வளர்த்துக்கொண்டார்.

4. விளையாட்டின் அனைத்து விதிமுறைகளையும் சரியாக தெரிந்து வைத்திருந்தார். ஒரு முறை நடந்த விளையாட்டில் அவர் ஒரு கோல் கூட போட முடியாத நிலை ஏற்பட்டது. உடனே அவர் கோல் போஸ்ட் அளவு தவறாக உள்ளது, அதை அளந்து சரி செய்யுமாறு கூறினார். அவர்களும் பார்த்தபோது அவ்வாறே தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின் சரி செய்தார்கள்.
 
       ஆகவே ஹாக்கி உலகத்தின் மெஜிசியன் என்ற பெயரைப் பெற்ற தியான் சந்த் நமது நாட்டிற்கு ஒலிம்பிக் சங்கத்தை அளித்த பெருமையை பெற்றார். சுதந்திரத்திற்கு பின் இந்திய ராணுவத்தில் மேஜர் என்ற நிலைக்கு வந்து பணி ஓய்வு பெற்றார். 1956 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவித்தது நமது அரசாங்கம். அவர் தன்னை பற்றி சொல்லும்போது “என்னிடம் இயற்கையான திறமை (Talent) இருப்பதை கண்டு கொண்டேன். ஆனால் அதை தக்கவைக்க கடும் உழைப்பை மட்டும் தான் நான் போட்டேன்” என்று அடக்கமாக கூறினார். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஒரு மனிதன், விளையாட்டு வீரர், தேசபக்தர், யோகி, தியான் சந்த் அவர்களைப் போல நாமும் தினசரி ஷாகா மூலம் நம் திறமைகளை வளர்த்து, தேசத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும் பல நல்ல செயல்களில் வெற்றி பெற தொடர்ந்து கடும் உழைப்பை காணிக்கையாக்குகிறோம்.

விளையும் பயிர்

பள்ளி மாணவராக இருந்த நாட்களில் திலகர் ஒல்லியாக ஒடிந்து விழுகிறவராகத்தான் இருந்தார். கல்லூரியில் காலடி வைத்ததும், ஒரு வருடம் முழுவதும் உடற்பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி, உடலை ஆரோக்கியத்துடன் வலிமையும் நிறைந்ததாக ஆக்கிக்கொண்டார்.
கல்லூரி விடுதியின் மொட்டை மாடியில் ஐந்தாறு நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார் இளைஞரான திலகர். “நாம் சுயராஜ்ஜிய போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் நம்மை சி.ஐ.டி.கள் வட்டமிடுகிறார்கள். திடீரென்று இங்கே வந்து, அவர்கள் நம்மை வளைத்துக் கொண்டால், நாம் மாயமாய் மறைவது எப்படி?” என்று ஒரு நண்பர் கேட்டார்.
“இதோ இப்படித்தான்!” என்று சொல்லிக் கொண்டே, திலகர் தொபேலென்று கைப்பிடி சுவர் ஏறி மாடியில் இருந்து குதித்து விட்டார். மற்றவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு படி இறங்கி வந்து பார்த்தால், திலகர் ஆனந்தமாகக் கைகளைத் தட்டியவாறு படியேறி வந்து கொண்டிருந்தார்!  பின்னாளில் “சுதந்திரம் நமது பிறப்புரிமை!” என்ற தாரக மந்திரத்தை நாட்டுக்குத் தந்தவர் அல்லவா அவர். விளையும் பயிர் முளையிலேயே - அன்றே பளிச்சென்று மின்னி இருக்கிறது!

தவ வலிமை

அடியோடு நம்பிக்கை இழந்து போய் அந்த அரசன், முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலம் தேடி போனான். “முனிவர் பெருமானே! போரில் தோற்று நாட்டை இழந்து விட்டேன். அன்பு கூர்ந்து என்னை கைதூக்கி விட வேண்டும்” என்று வேண்டினான்.
முனிவர், “அரசே அதோ அந்த மரத்தின் கீழே போய் நின்று மரத்திடம் உன் விருப்பத்தைச் சொல்” என்றார். அது கற்பக விருட்சம்! அதனால் அரசன் எண்ணம் நிறைவேறியது. இழந்த நாட்டை பெற்றுவிட்டான். ஆனால் மறுபடி ஆசிரமத்துக்குப் போய் முனிவரிடம் தனது சந்தேகத்தை கேட்டான்.
“புண்ணியாத்மாவே! தங்களிடம் விரும்பியதையெல்லாம் அளிக்கும் கற்பகமே இருக்கும் போது தாங்கள் இப்படி ஏழையாகவே ஏன் இருக்கிறீர்கள்? மிகவும் தேவையான சௌகரியங்களைக் கூட கேட்டு பெற்றுக் கொள்வதில்லையே ஏன்?” என்றான் அரசன்.
முனிவர் சிரித்தபடி சொன்னார்:-
“அரசே! நாங்கள் கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை நடத்துகிறோம். ஆகவேதான் கற்பகமரம் இங்கே முளைத்துள்ளது. எனது தவம் தளர்ச்சி அடையுமானால் அந்தக் கணத்திலேயே இந்த கற்பக மரத்தின் சக்தி போய்விடும். மனிதன் உயர்ந்த லட்சியத்தை அடைய ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படும்போது சுற்றுப்புற சூழ்நிலை எப்படி இருந்தாலும் பொருட்படுத்தவே கூடாது. பற்றற்ற மனநிலையுடன் செயல்பட வேண்டும். நமது எண்ணம் கைகூட இவைதான் காரணமாகின்றன”.

மகாகவி பாரதியார்

வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா

சுவாமி விவேகானந்தர் ௯றியது

சுறுசுறுப்பாய் இருப்பீர்களானால் எல்லாம் சுலபமே. சோம்பல் கொண்டவர்களுக்கு எதுவும் எளிதல்ல.

சுவாமி விவேகானந்தர் ௯றியது

இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக் ௯ர்மையும் உடையவர்களே இறைவனை அடையக் ௯டியவர்கள் என்று வேதங்கள் முழங்குகின்றன.

தீரன் சின்னமலை

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய போர் வீரர் (1756 - 1805)

கொங்குநாடு என்பது தற்போதைய ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சார்ந்த ஒரு சில பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்த கொங்கு மண்டலத்தைச் சார்ந்த பெயர் அறியாத பல வீரர்களும் மிகவும் உக்கிரமாக  ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு இருக்கிறார்கள். 1802 ஆம் ஆண்டிலிருந்து 1804 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆங்கிலேயர்களுக்கு எதிரான இரண்டாம் பொலிகார் சண்டையில் கொங்கு மண்டலத்தில் இருந்து சிறந்த வீரர்கள் போரிட்டு இருக்கிறார்கள். ஈரோட்டுக்கு அருகில் உள்ள காங்கேயம் என்னும் ஊரில், தீர்த்தகிரி என்கிற வீரர் 1756 ஆம் ஆண்டு இரத்தினசாமி மந்திரியார் என்பவருக்கு மகனாகப்  பிறந்தார். இவர் அங்கே தலைவராக விளங்கியது மட்டுமல்லாமல் சிறந்த நிர்வாகியாகவும், முதல்தரமான குதிரைப்படை வீரராகவும் விளங்கினார். இவர் சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து அவர்களுக்கும் தனது போர்ப் படையில் இடம் தரும் அளவிற்கு பரந்த மனப்பான்மை கொண்ட தலைவராக விளங்கினார். தீர்த்தகிரி மாபெரும் வீரராக விளங்கிய காலத்தில் ஆங்கிலேயருக்கு முன்பாகவே கொங்கு மண்டலத்தை மைசூர் படையில் இருந்தும், முதலாவதாக ஹைதர் அலி, பின்பு அவருடைய மகன் திப்புசுல்தான் ஆகியோரிடம் இருந்தும் அவர் காப்பாற்றி வந்தார். ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கொங்கு மண்டலத்திற்கு அருகில் உள்ள பல பிரதேசங்களை கைப்பற்றிய போதும், தீர்த்தகிரி கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.

           கொங்கு மண்டலத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்களில் இருந்து வரிவசூல் செய்து கொண்டு திப்பு சுல்தானுடைய  திவான் படைவீரர்களுடன் செல்வதை கேள்விப்பட்ட தீர்த்தகிரி, அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தினான். கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்ய மைசூரிலிருந்து சுல்தானுடைய அதிகாரத்திற்கு இங்கு எந்த விதமான தேவையும் ஏற்படவில்லை என்று தைரியமாக அவர்களை அடித்து விரட்டினான் தீர்த்தகிரி. இவ்வாறு அவர்கள் வரிவசூல் செய்து வந்த பணத்தை பறிமுதல் செய்து கொண்டு, அவர்களை விரட்டி அடிக்கும் போது தீர்த்தகிரி இவ்வாறு சொன்னார்," போய் உங்கள் சுல்தானிடம் சொல்லுங்கள், சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் ஒரு "சின்ன மலை" வரிப் பணத்தை எல்லாம் பிடுங்கிக் கொண்டது". இவ்விதமாகத் தான் தீர்த்தகிரி, தீரன் சின்னமலை என்ற அழியாப் பெயரை பெற்றார்.

            காலம் மாறியது; மைசூரை ஆண்ட திப்பு சுல்தானுக்கு ஆங்கிலேயர் மூலமாக நெருக்கடி ஏற்பட்டது. ஜெனரல் ஹாரிஸ் என்பவன் மைசூரை நோக்கி பெரும்படையோடு தாக்குதல் தொடுத்தான். அப்பொழுது அந்தத்  தாக்குதலை சமாளிக்க திப்பு சுல்தான் தீரன் சின்னமலையினுடைய உதவியை நாடினான். ஏற்கனவே திப்பு சுல்தான் மீது பகை இருந்தும்கூட ஆங்கிலேயன் என்கிற வெளிநாட்டு சக்தியை தோற்கடிப்பதற்காக தீரன் சின்னமலை, தனது பத்தாயிரம் வீரர்களோடு  மைசூர் விரைந்தார். அந்தப் போரில் திப்புசுல்தான் படைகளோடு சேர்ந்து கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். இருந்தபோதும் ஆங்கிலேயர் திப்பு சுல்தானை வீழ்த்தி அவனைக்  கொன்று விட்டனர். இதன்பிறகு தீரன் சின்னமலை தனது படைவீரர்களுடன் கொங்கு நாடு திரும்பினார். துரதிருஷ்டவசமாக தீரன் சின்னமலையின் படையைச் சேர்ந்த வேலப்பன் என்கிற ஒரு நம்பிக்கைக்குரிய படைவீரன் பிரிட்டிஷ் அதிகாரிகளின் கையில் சிக்கினன். அவர்களுடைய சித்திரவதை தாங்காமல் அவர்களுக்கு உடந்தையாக மாறுவதாக அவன் வாக்களித்தான்.

          திப்பு சுல்தானுடைய வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் கவனம் கொங்கு நாட்டின் மீது திரும்பியது. ஆங்கிலேய அதிகாரிகள் தீரன் சின்னமலையை சரணடைந்து விடுமாறு செய்தி சொல்லி அனுப்பினார்கள். ஆனால், தீரன் சின்னமலை வீரத்துடன் அவர்களுடைய சமாதான உடன்படிக்கையை நிராகரித்து விட்டார். வரிவசூல் செய்வதிலும் ஒரு குறிப்பிட்ட ஆங்கிலேயப் படையணியை காவிரி நதியின் ஓரத்தில் வைத்து பாதுகாத்திடவும் வேண்டும் என்கிற நிபந்தனைகளை தீரன் சின்னமலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயப் படைகள் கர்னல் மெகிஸ்கான்  தலைமையிலே காவேரி ஆற்றின் கரையோரமாக, தீரன் சின்னமலையின் படைகளோடு மோதுவதற்கு தயாராகி வந்தது. இதனை முன்பே எதிர்பார்த்த தீரன் சின்னமலை தனது படைவீரர்களை மிக முக்கியமான பகுதிகளில் நிலைநிறுத்தி ஆங்கிலேயப் படையை எதிர்பார்த்து நின்றான். தீரன் சின்னமலை காவிரி ஆற்றில் எந்தெந்த பகுதிகளில் சுழல் உள்ளதோ, ஆழமான பகுதிகள் உள்ளதோ அவை அனைத்தும் அறிந்து வைத்திருந்தான். ஆகவே ஆற்றில் சுழல் உள்ள பகுதிகளுக்கு முன்பாக தனது படை வீரர்களை நிலைகொள்ளச் செய்வதன் மூலம் ஆங்கிலேயப் படை அணியை தூண்டி தன் பக்கமாக அவன் இழுத்தான். விஷயம் தெரியாத ஆங்கிலேய குதிரை படையானது காவிரி ஆற்றில் சுழல் உள்ள இடங்களில் எல்லாம் இறங்கி, அவர்கள் சுழலில் சிக்கி ஆற்றோடு இழுத்துச் செல்லப்பட்டார்கள். ஆங்கிலேயப்படை சின்னாபின்னம் அடைந்து நாலா திசையிலும் சிதறியது. படை நடத்தி வந்த மெகிஸ்தான் தீரன் சின்னமலையால் பிடிக்கப்பட்டு உடனடியாக அவன் சிரச்சேதம் செய்யப்பட்டான். இவ்விதமாக தீரன் சின்னமலை ஆங்கிலேயப் படையின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தார்.

      ஆங்கிலேயப் படைகள் தோல்வியுற்றதைக் கேள்விப்பட்ட ஜெனரல் ஹாரிஸ் மிகவும் கோபமடைந்து தானே படை நடத்தத் தீர்மானித்தான். கொங்கு மண்டலத்தில் ஒரு கோவில் திருவிழா நடைபெறும் சமயத்தில் திடீரென தாக்குதல் நடத்தி தீரன் சின்னமலையைப்  பிடிக்க வேண்டும் என்று அவன் திட்டமிட்டான். ஆனால் இதை முன்பே தெரிந்து கொண்ட  தீரன் சின்னமலை சாமர்த்தியமாக கோயில் திருவிழாவில் இருந்து தப்பி விட்டார். தீரன் சின்னமலையை பிடிக்க முடியாமல் போனதால் கடும் கோபமுற்ற  ஜெனரல் ஹாரிஸ் கோயிலை சேதப்படுத்திவிட்டு ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் கோட்டையை நோக்கி விரைந்தான்.

        ஆனால் கோட்டை காலியாக இருந்தது. யாரும் அங்கே காணப்படவில்லை. கோட்டையை சுற்றி வரும் பொழுது திடீரென்று எங்கிருந்தோ ஜெனரல் ஹாரிஸ்ஸை நோக்கி ஒரு குதிரை வேகமாக வந்தது. அதன் மீது அமர்ந்து மின்னல் வேகத்தில் வந்த தீரன் சின்னமலை ஜெனரல் ஹாரிஸ்ஸை  நோக்கி ஒரு வெடிகுண்டை வீசினான். அது ஜெனரலுக்கு மிக அருகாமையில் வெடித்தது. நடந்த குழப்பத்தில் தீரன் சின்னமலை தப்பித்து விட்டார். ஹாரிஸ் தன் படைகளோடு பின்வாங்கினான்.

        இரண்டாம் முறையாக ஜெனரல் ஹாரிஸ்  பெரும் படையோடு ,பீரங்கிகள் கொண்டு ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் கோட்டை மீது வெறித் தாக்குதல் நடத்தினான். ஒற்றர்கள் மூலம் இதை ஏற்கனவே தெரிந்துகொண்ட  தீரன் சின்னமலை தப்பித்து விட்டார். கோட்டையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த ஜெனரல் ஹாரிஸ்சுக்கு மிகுந்த ஏமாற்றமாக ஆனது. கோட்டை காலியாக இருந்தது. மிகுந்த வெறுப்புற்ற ஜெனரல் அங்கிருந்த ஒரு காலணியை எடுத்து மிக வேகமாக அங்குள்ள சுவரின் மீது எறிகிறான். அந்தக் காலணி உடைந்து அதனுள் ஒரு சிறிய சீட்டு ஹாரிஸின் கையில் கிடைக்கிறது .அதில் ஏற்கனவே ஆங்கிலேயப் படைகள் அங்கே வருவதற்கான துப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜெனரல் ஹாரிஸ் தனது படையில் உள்ள துரோகி யார் என்பதை அறிந்து கொள்வதற்கு தீவிர விசாரணை செய்ய முடிவு செய்கிறான்.

    அந்தக் காலணியைச் செய்த தொழிலாளியை விசாரித்ததில் ஏற்கனவே மைசூரில் ஆங்கிலேயப் படையினரால் பிடிக்கப்பட்ட தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய வேலப்பன் என்கிற வீரன்தான் அடிக்கடி தகவல்களை அனுப்பி வருவதை ஜெனரல் ஹாரிஸ் கண்டுபிடித்து விடுகிறான். இதனால் கோபமடைந்த ஜெனரல் உடனடியாக அவனை வரவழைத்து துப்பாக்கியால் சுட்டு அவனைத் தீர்த்துக் கட்டுகிறான். சமையற்காரன்  நல்லான் என்பவனைப் பயன்படுத்தி தீரன் சின்னமலையை பிடிக்க ஹாரிஸ் திட்டமிடுகிறான். காட்டினுள் மறைந்து வாழும் தீரன் சின்னமலை கொரில்லா போர் முறையில் அடிக்கடி திடீர் தாக்குதல் நடத்தி ஆங்கிலேயப் படையை திக்குமுக்காடச் செய்து வந்தார். இந்த நேரத்திலே ஆங்கிலேயப் படையின் மிரட்டலுக்கு அடிபணிந்து சமையற்காரன் நல்லான் ஜெனரல் ஹாரிஸ்சுக்கு உதவ உடன் பட்டான். அவனுடைய ஏற்பாட்டின்படி காட்டில் மறைந்து வாழும் தீரன் சின்னமலைக்கு உணவு சமைத்து தருவதற்காக நல்லான் காட்டினுள் அனுப்பப்பட்டான். சரியான உணவு இன்றி திரிந்து வரும் தீரன்சின்னமலையை பிடித்திட இது ஒரு நல்ல வாய்ப்பாக மாறியது. ஒரு குடிசையில் நல்லான் தங்கி இருந்தான். தீரன் சின்னமலை நல்லான் குடிசைக்குள் பிரவேசித்து உணவு ஏற்றுக்கொள்ளத் தயாரானார். உணவு உண்ணும் நேரத்தில் ஆயுதங்கள் தேவை இல்லையே என்று நல்லான் கூறிட அவன் பேச்சை நம்பிய தீரன் சின்னமலை தனது ஆயுதங்களை குடிசைக்கு வெளியிலேயே வைத்துவிட்டு நிராயுதபாணியாக உணவினை சாப்பிடத் தொடங்கினார். சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த நல்லான்  பின் வாசல் கதவை திறந்து விட்டான். வெளியிலேயே காத்து இருந்த ஆங்கிலேய படைகள் நயவஞ்சகமாக  பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்து உணவு உண்டு கொண்டிருந்த தீரன் சின்னமலையையும் அவரது சகோதரரையும் கைது செய்து விட்டார்கள்.

    பிடிபட்ட அந்த நிலையிலும் தீரன் சின்னமலை தன்னைக் காட்டிக்கொடுத்த துரோகி நல்லானின் கழுத்தை நெரித்து அங்கேயே கொன்றுவிட்டார். ஆங்கிலேயப் படையினரால் கைது செய்யப்பட்ட தீரன் சின்னமலையும், அவரது சகோதரரும் மற்றைய முக்கிய வீரர்களும் 1805 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் நாள் சங்ககிரியில் தூக்கிலிடப்பட்டனர். இவ்விதமாக மைசூர் திப்பு சுல்தானிலிருந்து ஆங்கிலேயர்கள் வரை மிகத் தீவிரமாக போரிட்டு அவர்களை பல முறை வென்ற தீரன் சின்னமலை ஒரு துரோகியின் நயவஞ்சகத்தால் பிடிபட்டு, தன் தாய் நாட்டிற்காகத் தன் இன்னுயிரை இழந்தார். இதன்பிறகு கோபமடைந்த ஆங்கிலேயர்கள் தீரன்சின்னமலை தொடர்பான அனைத்து இடங்களையும் பொருட்களையும் அழித்து விட்டதால் அவரைக் குறித்த எந்த விதமான வரலாற்று தகவல்களும் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது. கிராம மக்களின் செவிவழிச் செய்திகள் மூலமாகவும், நாட்டுப்புறப் பாடல்கள் மூலமாக மட்டுமே நாம் தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை அறிந்துகொள்ள முடிகிறது. புலவர் குழந்தை என்னும் தமிழ் அறிஞர் தனது பாட்டனாரிடம் இருந்து செவிவழியாக பெற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தொகுத்த விஷயங்களைத்தான் இருபதாம் நூற்றாண்டிலே நாம் தீரன் சின்னமலையின் வரலாறாகப் பெற முடிந்திருக்கிறது.

ஆதிசங்கரர் காட்டிய தீரம்

ஆதிசங்கரர் பாரதத்தை வலம் வந்தவாறே, இமயத்தில் உள்ள பத்ரிகாசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். அங்குள்ள ஸ்ரீ பத்ரி நாராயணர் ஆலயத்தில் விக்ரஹம் இல்லை. இது கண்ட சங்கரர் திடுக்குற்றார். அங்குள்ளவர்களிடம் விசாரித்தார். விக்கிரஹத்தை சீன கொள்ளையர்களுக்குப் பயந்து, நாரத குண்டம் என்ற குளத்தில் ஒளித்து வைத்திருப்பதாக மக்கள் கூறினார்கள்.
ஸ்ரீ ஆதிசங்கரர் மிகவும் வேதனைப்பட்டார். மக்கள் தினமும் போற்றி வழிபடும் ஸ்ரீ பத்ரி நாராயணருக்கு இந்தக் கதியா வரவேண்டும், என்று மனம் உருகிக் கண்ணீர் வடித்தார். எந்த வகையிலும் ஸ்ரீ பத்ரிநாதரை மக்கள் தரிசிக்க ஆவன செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டார்.
உடனே குளத்தில் இருந்து விக்கிரஹத்தை மீட்க ஆயத்தமானார். ஆனால் மக்கள் சம்மதிக்கவில்லை. ஸ்ரீ ஆதிசங்கரரை நோக்கிய மக்கள் “மிக ஆழமான குளம். இதனுள் குதித்து விக்கிரஹத்தை எடுப்பது என்பது பெரிய நீச்சல் வீரராலும் இயலாத காரியம். அதனால் தாங்கள் இம்முயற்சியில் இறங்க வேண்டாம்!” என்று தடுத்தனர்.
ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் குளத்தில் குதித்தார் ஸ்ரீ ஆதிசங்கரர். முதல் முறை நீருக்குள் குதித்து மூழ்கி மேலெழுந்த போது வெறுங்கையுடன் காணப்பட்டார். இரண்டாம் முறையும் அப்படியே. விக்கிரஹம் அவரது கைக்குக் கிட்டவில்லை. மூன்றாம் முறை பிராணாயாமம் செய்து மூச்சடக்கி நீருள் மூழ்கி அங்குமிங்கும் தேடினார். விக்கிரஹத்தைக் கண்டுபிடித்து மேலே கொண்டு வந்து கரை சேர்த்து விட்டார்.
விக்ரஹத்திற்கு சேதம் ஏற்பட்டிருந்தது. எனவே அதற்கு சாஸ்திர முறைப்படி பரிகாரம் செய்து ஸ்ரீ பத்ரிநாராயணரை ஆலயத்துக்குக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீ ஆதிசங்கரர். மகான் ஸ்ரீ ஆதிசங்கரரின் தீரச் செயலைக் கண்டு மக்கள் வியந்தனர்; புகழ்ந்தனர்; பாராட்டினர்!

வீரத்துக்கு விருது

பாரத நாட்டுப் படையில் வீரத்தைக் காட்டியதற்காக மகாவீர் சக்ர, பரம்வீர் சக்ர விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்திய அரசு முதன் முறையாக ராணுவத்தில் இல்லாத ஆர்எஸ்எஸ் ஊழியர் ஸ்ரீ பூஜாரி மாணிக்கத்திற்கு அவரது மறைவுக்குப்பின் கீர்த்தி சக்ரா விருது வழங்கியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலம் வாரங்கல் ஜில்லாவில் திம்மபேட் கிராமத்தில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அது ஒரு நக்சலைட்டுகளின் பகுதி ஆகும். பத்து கிராமங்களில் ஜனசக்தி என்ற ஒரு நக்சலைட் குழு, கிராமவாசிகளிடம் இருபத்தைந்து லட்ச ரூபாய் திரட்டும் படி கூறியது. கிராமவாசிகள் மறுக்கவே ஆறு லட்சம் என்று குறைத்துக் கொண்டனர். ஆனால் மாணிக்கத்தின் தலைமையில் கூடிய கிராமவாசிகள் இந்த தொகையையும் கொடுக்க மறுத்தனர்.
இந்த நிகழ்ச்சியால் கொதிப்படைந்த மூன்று நக்சலைட்டுகள் கிராமத்தின் மீது தாக்குதல் என்று அறிவித்தனர். மாணிக்கம் மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஆதிநாராயணனை பிடித்து சென்று விட்டனர். சற்று தூரம் சென்றதும் கம்பாலும், கோடாரியாலும் அடிக்கத் தொடங்கினர். கோடாரியால் தாக்கப்பட்டு ஆதிநாராயணன் இறந்தார். ஆனால் சங்க ஷாகாவில் சிலம்பம் பயின்றிருந்த மாணிக்கம் ஒரு எதிரியிடமிருந்து சிலம்பத்தை பிடுங்கி, மூன்று எதிரிகளையும் தாக்கி வீழ்த்தினார். தங்கள் கூட்டாளிகள் மூவர் இறந்ததனால் வெகுண்ட நக்சலைட்டுகள் நான்கு புறமும் மாணிக்கத்தை சூழ்ந்துகொண்டு காட்டுமிராண்டித்தனமாக அவரைக் கொலை செய்தனர்

மனிதா நீ மகத்தானவன்


மனிதா நீ மகத்தானவன் - மண்ணில்
பரம்பொருளின் உருவானவன்
பாரதத்தாய் இளையமகன்
பண்பாட்டில் மூத்த மகன்
வரலாற்றை உருவாக்கும் தலைமகன் நீ 
(மனிதா நீ)

மனம் வைத்தால் மலைகளும் உன்
கைகளுக்குள் தூளாகும் 
கணப் பொழுதில் நதிகளுமே
திசைமாறிப் பாய்ந்து வரும்
மனம் வைத்தால் மண்ணிதனில்
அம்ரு தமும் திரண்டுவரும்
வானமிங்கு பூமி யுடன்
விளையாட்டாய் ஒன்றிணையும்
அழிவற்றவன் நீ....அழிவற்றவன் நீ
உந்தன் உயிரினிலே நின்றுலவும்
பரம்பொருளின் மகத்துவத்தை உணர்ந்திடுவாயே
(மனிதா நீ)

கண்களிலே கனலிருக்கும் 
அசைவினிலே புயலிருக்கும்
பொங்கிவரும் சினங் கண்டு
காலனிங்கு ஓடிவிடும்
மண்ணும் செந் நிறமாகும்
மாமலையும் தாழ்ந்துவிடும்
சீற்றத்தின் உச்சியிலே
தாண்டவம் நடம் புரியும் 
உண்மையிலே நீ...உண்மையிலே நீ
பெரும் சக்திகளின் முழுஉரு நீ
குரல் கொடுத்து புதுயுகத்தை அழைத்திடுவாயே
(மனிதா நீ)

அண்டத்தில் வீரமகன் 
அக்னியைப் போல் பெருந்தீரன்
கட்டளைக்கு அடிபணிந்து 
காலம்கூட நின்று விடும்
உறுதி கொண்டு உழைத்தாலே
சாதிப்பாய் எதையும் நீ
துணிவு கொண்ட உள்ளத்துடன்
சிங்கமென எழுவாய் நீ
முயன்றாலே நீ...முயன்றாலே நீ
உந்தன் முயற்சியெனும் பெரும் பலத்தால்
மண்ணுலகை விண்ணுலகாய் மாற்றிடுவாயே
(மனிதா நீ

சுவாமி விவேகானந்தர் ௯றியது

அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவுகடந்த அஞ்சாமை, அளவில்லாத பொறுமை இவையே நமக்குத் தேவை.

சுவாமி விவேகானந்தர் ௯றியது

கோழையும் முட்டாளுமே இது என் விதி என்பான். ஆற்றல் மிக்கவனோ, என் விதியை நானே வகுப்பேன் என்று ௯றுவான்

சித்தர் பாடல்

கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.
                                             
பொருள்:-
உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறி விடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல் என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம்

Thursday, 23 July 2020

திருக்குறள்

அதிகாரம் : வாழ்க்கைத்துணை நலம்
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

விளக்கம் :-

 மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?


Tuesday, 21 July 2020

திருக்குறள்

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

விளக்கம்:
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.


திருக்குறள்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

விளக்கம்:
ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

Sunday, 19 July 2020

புதிய கோணங்கள்

சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள்.

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான்.

யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும்
ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர்.

அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த
வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான்,

“நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”

வியாபாரி கேட்டான்.

“எப்படி?”

“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன்.

இரண்டு புத்த பிக்குகளுக்கு அது
சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”

இன்னொரு மகன் சொன்னான்.

“நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான்.

“எப்படி?”

“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள்
தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது.

அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது
என்று புத்த மடாலயத்தில் சொன்னேன்.

ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற
ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.

மூன்றாம் மகன் சொன்னான்,
“நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான்.

“எப்படி?”

“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை
வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன்.

அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலாம் என்று மடாலயத் தலைவர் என்னை கேட்டார்.

நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும்.

அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன்.

அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள்
வாங்க ஒப்புக் கொண்டார்”

அந்த வியாபாரி எந்த மகனிடம் தன்
வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.

மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம்.

சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும்.

அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம்
தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.

முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள் முயற்சிகளே உதாரணம்.

ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படா விட்டால் வேறெதற்காவது பயன்படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது.

புத்த பிக்குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்பு பயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு
உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது. ஆனால்,
இந்த இரண்டு மகன்களுடைய முயற்சியாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.

மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்குகளுக்குப் பயனில்லா விட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற
சிந்தனையைத் தான் செய்தான்.

அந்த வெறும் சீப்பை புத்தரின்
உபதேசங்களைச் செதுக்கி அதை அவர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின்
ஆசியாக மாற்றி விற்பனை செய்தான்.

அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம்
வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல.

புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள்
தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.

எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள்.

க்ஷமுடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள்.

பார்வையை விரிவுபடுத்துங்கள்.

சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள்.

பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.

முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள்.


கோபுர தரிசனம்

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?  எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.

ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா...ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.

குளத்து நீரில் தலையில் கிரீடம், கர்ண குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 'ராஜா...நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். இவனின் பணப்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 'வா...இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை  பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை  ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்.

நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.

அர்ஜூனா Vs பிங்கலை

தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை என அர்ஜூனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது. உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்று கிருஷ்ணர் கேட்டார். என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்து விடுகிறானே கிருஷ்ணர் என அர்ஜூனன் திடுக்கிட்டான். அர்ஜூனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க கிருஷ்ணர் முடிவு செய்தார். அர்ஜூனா நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா என்று கிருஷ்ணர் அழைத்தார். இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறு என்றான். சற்று நேரத்தில் அரண்மனையிலிருந்து கிருஷ்ணரும் அர்ஜூனனும் பெண்களாக மாறி பிங்கலையின் வீட்டுக் கதவை தட்டினர். 

தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள். தாயே நாங்கள் அடுத்த ஊருக்குச் செல்வதற்காக நடந்துவந்தோம். கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா என்று கேட்டார் கிருஷ்ணர். உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்த பிறகு நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்லலாம் என்றாள் பிங்கலை. பூஜையறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும் சிறியதாக ஒரு கத்தியும் நடுத்தர வடிவில் ஒரு கத்தியும் பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. தாயே கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே கத்திகள் யாருடையவை என்று கிருஷ்ணர் கேட்டார். என்னுடையவைதான் வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணனுக்குக் கொடுமை செய்த என் விரோதிகள் மூவரைக் கொல்ல வேண்டும் அதற்காக மூன்று கத்திகள் வைத்திருக்கின்றேன் என்றாள். யார் அந்த விரோதிகள் தாயே என்று கேட்டார் கிருஷ்ணர். குசேலன், திரௌபதி, அர்ஜூனன் இந்த மூவரும் என்றாள். குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி. திரௌபதிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டு திரியும் அர்ஜூனனைக் கொல்ல இந்தப் பெரிய கத்தி என்றாள். அர்ஜூனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இந்த மூவரும் கிருஷ்ணருக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே என்று கேட்டார் கிருஷ்ணர். குசேலன் அந்தத் தவிட்டு அவலைக் கிருஷ்ணருக்குக் கொடுக்கலாமா என் கிருஷ்ணர் வெண்ணெய்யை விரும்பித் திண்பவன். வாய் உறுத்தாத ஆகாரம் அது. அவல் என் கிருஷ்ணரின் நீண்ட தாமரை இதழ்போன்ற நாவில் புண்ணைத் தோற்றுவிக்காதா இந்த புத்திகூட இல்லாமல் பக்தி என்ற பெயரில் அவலை அவனுக்குக் கொடுத்தான். ஆகவே அவனுக்கு சிறிய கத்தி என்றாள். 

திரௌபதி எப்படி உங்கள் விரோதியானாள் என்று கேட்டார் கிருஷ்ணர். அஸ்தினாபுரத்தில் இருக்கும் திரௌபதிக்கு துவாரகையில் இருக்கும் கிருஷ்ணர் வாரி வாரிப் புடவைகளை அருளினானே புடவைகளை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலிக்க மயக்கம் போட்டு விழுந்தான். புடவையை இழுத்த துச்சாதனனுக்கே கைவலிக்குமானால் புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய கிருஷ்ணருக்கு கை எவ்வளவு வலித்திருக்கும் கிருஷ்ணரின் கைகளை வலிக்கச் செய்த திரோபதியை சும்மா விடுவேனா அவளுக்கு நடுத்தர அளவுள்ள கத்தி என்றாள். 

அர்ஜூனன் கிருஷ்ணரின் பக்தர்களிலேயே தலை சிறந்தவனாயிற்றே அவன் மேல் ஏன் விரோதம் என்று கேட்டார் கிருஷ்ணர். அர்ஜூனனின் பக்தியை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உண்மையான பக்தனாக இருந்தால் கை வலிக்க வலிக்கத் தேரோட்டச் சொல்வானா. குதிரைகளின் கயிற்றை இழுத்து இழுத்துக் கிருஷ்ணர் கைகள் எத்தனை துன்பப்பட்டிருக்கும் தேர்க் குதிரைகளை ஓட்டுவது சாதாரண வேலை இல்லை. ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம் என் முன்னால் என்றாவது ஒருநாள் அகப்படுவான் அர்ஜூனன். அன்று அவனை பார்த்துக் கொள்கிறேன் அவனுக்கு பெரிய கத்தி என்றாள். 

அர்ஜூனன் பதற்றத்தோடு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து நகைத்தார் கிருஷ்ணர். குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவலைத் தவிர வேறு பொருள் இல்லை. எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கிருஷ்ணர்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன் என்றார் கிருஷ்ணர். பிங்கலை யோசித்தாள். பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கி வீசினாள். திரௌபதிக்கு புடவை கொடுத்ததில் கிருஷ்ணர் கைகள் வலித்தது உண்மைதான். என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதல்லவா அதைக் காத்துக்கொள்ள அவள் கொலைகூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே சுயநலமே ஆனாலும் மானம் காக்க வேண்டியதால் திரௌபதியையும் மன்னித்து விடுங்களேன் என்றார் கிருஷ்ணர். பிங்கலை இரண்டாவது கத்தியையும் வீசிவிட்டாள். 

போரில் தனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்னும் உலகியல் சார்ந்த சுயநலத்திற்காக கிருஷ்ணரை தேரோட்டச் செய்த அர்ஜூனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் இந்தப் பெரிய கத்தி இந்தப் பீடத்திலேயே இருக்கட்டும் என்றாள் பிங்கலை. சுயநலம் பிடித்த அர்ஜூனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்றான் கிருஷ்ணர். அர்ஜூனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கிருஷ்ணர் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னார் அர்ஜூனன் கிருஷ்ணர் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான் அர்ஜூனனை நீங்கள் கொன்றுவிட்டால் உற்ற நண்பனை இழந்து கிருஷ்ணர் வருந்துவானே. கிருஷ்ணர் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா என்று கேட்டார் கிருஷ்ணர். நீ சொன்ன கோணத்தில் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நீ சொல்வதும் சரிதான். எனக்கு இந்தப் பிறவியிலோ மறுபிறவியிலோ எதுவும் வேண்டாம். முக்திகூட வேண்டாம். என் கிருஷ்ணர் உடல் வருத்தமோ மன வருத்தமோ இல்லாமலிருந்தால் அதுபோதும் எனக்கு. கிருஷ்ணருக்கு மன வருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன் என்று கூறிய பிங்கலை மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள். பெண் வேடத்திலிருந்த அர்ஜூனன் மூதாட்டி பிங்கலையை கீழே விழுந்து வணங்கியபோது அவன் ஆணவம் முற்றிலுமாக அழிந்திருந்தது.