Monday, 16 March 2020

உள்ளங்கையில்_வைகுண்டம்

ஒருநாள் அதிகாலை கிருஷ்ணரின் வளர்ப்புத் தந்தை நந்தகோபர் யமுனை நதியில் நீராட புறப்பட்டார். அப்போது இருள் விலகவில்லை. தண்ணீருக்குரிய தேவதையான வருணனின் தூதன், காலமற்ற நேரத்தில் நீராட வந்த நந்த கோபரை வருணனிடம் இழுத்துச் சென்றான்.நீராடச் சென்ற தங்கள் தலைவரான நந்தகோபரைக் காணாததால், ஆயர்பாடியே கவலையில் ஆழ்ந்தது. யசோதை உள்பட எல்லாரும் செய்வதறியாமல் அழுதனர். கிருஷ்ணர் தன் யோகசக்தியால், நந்தகோபரைத் தேடினார். இது வருணனின் வேலை தான் என்பதை அறிந்தார். தந்தையை அழைத்து வர புறப்பட்டார். தன் மாளிகை நோக்கி வந்த கிருஷ்ணரைக் கண்ட வருணன், இருகைகளையும் கூப்பிவரவேற்றான். பகவானே! இன்று உங்களை தரிசிக்க என்ன புண்ணியம் செய்தேன்! தங்களின் திருவடியை வணங்கினால் பிறவிக் கடலையே கடந்து விடலாமே! யார் என அறியாமல் தங்களின் தந்தையை சிறை பிடித்த என் தூதனை மன்னியுங்கள்! எங்களுக்கு ஆசி கொடுங்கள் என்று வேண்டினான். வருணனின் வணக்கத்தை ஏற்றதோடு, தூதுவனின்செயலையும் மன்னித்தார் கிருஷ்ணர். நந்தகோபரோடு திரும்பிய கிருஷ்ணரைக் கண்ட ஆயர்பாடி மக்கள், கடவுளே தங்களோடு வாசம் செய்வதை அறிந்தனர். கிருஷ்ணா! நாங்கள் செய்த புண்ணியத்தால் உன்னோடு உறவாடும் பாக்கியம் பெற்றோம். நீ நிரந்தரமாக வாசம் புரியும் வைகுண்டத்தை இப்போது தரிசிக்க விரும்புகிறோம், என்றும் கேட்டனர். வைகுந்த வாசனாக தான் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் கோலத்தைக் கிருஷ்ணர்அவர்களுக்கு அப்போது காட்டியருளினார். உள்ளங்கையில் வைகுண்டம் என்பது போல, கிருஷ்ணரின் வரவால்ஆயர்பாடியே வைகுண்டமாக மாறியது. 

சர்வம் விஷ்ணு மயம்

தன்னையே நம்புபவன் உத்தமன்

கதிர்கள் விளைந்திருந்தது.

அதில் ஒரு பறவை தன் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.

அறுவடைக்கு நாள் நெருங்கிற்று.

வயலின் உரிமையாளர் அதனைப் பார்த்து தன் மகன்களிடம் சொன்னார்.

" பக்கத்து ஊர் பரமசிவன்கிட்ட அறுவடை செய்யச் சொல்லனும் !"

இதனைக் கேட்ட குஞ்சுப்பறவைகள் தங்கள் தாயிடம் சொல்லி , " அம்மா, அறுவடைக்கு ஆட்கள் வந்தால் நாம் எங்கே போவது..?"

பயப்படாதீர்கள். யாரும் வரமாட்டார்கள்  என்றது தாய்ப்பறவை.

பரமசிவன் மறுநாள் அறுவடைக்கு வராதது கண்டு வயலின் உரிமையாளர் தன் மகன்களிடம் ,

" பரமசிவன் வரல .அவன் தெரிஞ்சவன் . அதனால அவனுக்கு அக்கறை இல்லை.

நமது சொந்தக்காரன் சுப்பையாவிடம் சொல்வோம் " என்றார்.

இதனையும் குஞ்சுகள் சொல்ல கவலைப்படாதீர்கள் என்றது தாய்ப்பறவை.

சுப்பையாவும் அடுத்தநாள் வரவில்லை.  வயல் உரிமையாளர் , 
" அடுத்தவன்களை நம்பி பயன் இல்லை. அதனால் நாமே நாளை நம் குடும்பத்துடன் வந்து அறுவடை செய்வோம் !" என்று தன் மகன்களிடம் கூறினார்.

இதனை குஞ்சுகள் தங்கள் தாயிடம் கூறின.

உடனே தாய்ப்பறவை,

"மற்றவர்களைச் சாராது இவர்களே வர முடிவு செய்து விட்டதால் நாளை கண்டிப்பாக வந்து விடுவார்கள். அதனால் நாம் இன்றே வேறு இடத்திற்கு செல்வோம். கவலை வேண்டாம் !" என்றது.
.
தன் காரியத்திற்கு

அடுத்தவரை நம்புபவன் அதமன்.

உறவினரை நம்புபவன் மத்திமன்.

தன்னையே நம்புபவன் உத்தமன்.  

வள்ளுவர், விவேகானந்தர் சொன்னது போல விடாமுயற்ச்சியுடன் தொடர்ந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.

நான் சாதாரண ஸ்வயம்சேவக்

ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக் 

ஒரு சம்பவம் நினைவிற்கு வருகின்றது . ஸ்வயம் சேவகர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது , அறிமுகப் படுத்திக்கொள்ளச் சொன்னேன் . சில ஸ்வயம்சேவகர்கள் ' நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக்' என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்டார்கள் . " சங்க காரியத்தின் எந்த ஒரு பொறுப்பும் இல்லாதவன் நான் " என்று சிலர் சொல்கின்ற கட்டாயம் ஏற்படுகின்றது . எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் இருந்தால் , நமது கட்நாயக் , கணசிக்ஷக் ஆகியவர்கள் நம்மைத் தேடிவந்து விசேஷமான முயற்சி செய்யவேண்டிய அளவிற்கு நாம் நடந்துகொள்வது என்று ஆகும் . அதாவது , நாம் ஷாகாவிற்குச் செல்லாமல் இருந்து , அவர்கள் நமது வீட்டிற்கு வந்து அழைக்கும்படி செய்து . நமது கட்நாயக் , கண சிக்ஷகர்களை தமது வேலையில் விழிப்போடு இருக்கும்படி செய்வது . இதுதான் நமது பொறுப்பு என்பதுபோல தொனிக்கிறது .

பெருமைப்படத்தக்க விஷயம்

           நாம் அனைவருமே " சாதாரண ஸ்வயம்சேவகர்கள் . " அசாதாரணத் தன்மை எதில் உள்ளது ? எனக்கு சங்கத்தில் ஒரு முக்கியமான ஸ்தானம் உள்ளது . ஆங்கிலத்தில் சீஃப் ஆஃப் ஆர் . எஸ் . எஸ் . ( Chief of RSS ) என்கிறார்கள் . என்னிடம் உள்ள அசாதாரணத் தன்மை அல்லது அசாமான்யத் தன்மை எது ? கொஞ்சம் தாடி வளர்ந்துள்ளது . நீங்களும் / தினந்தோறும் முகச்சவரம் செய்யவில்லை என்றால் உங்களுக்கும் வளரும் . அதில் என்ன அசாமான்யத் தன்மை உள்ளது ? இங்கு ஒரு சிலர் அந்தத் திசையில் முயற்சி செய்து வருகின்றனர் . ஆகவே இதில் எந்த விசேஷமும் இல்லை .

எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவிற்கு வருகின்றது . அது நமது சங்கத்தை துவக்கியவரைப் பற்றியது . அவர் , தன்னுடன் உள்ள கார்யகர்த் தர்களுக்கு வலியுறுத்திக் கூறினார் : " இந்த சர்சங்கசாலக் வேலை செய்வதற்காக வேறு ஒருவரை தயார் செய்யுங்கள் . அப்பொழுது இந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து " சாதாரண ஸ்வயம்சேவக் " வடிவத்தில் நான் சகஜமாக வேலை செய்ய முடியும் . சாதாரண ஸ்வயம்சேவக் எப்படி இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் எனக்குச் சில கருத்துக்களும் , ஆசையும் , எதிர்பார்ப்புகளும் இருக கின்றன . அதன் படி , சுயமாக நடந்துகாட்டி , உடன் வேலை செய்பவருக்காக ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த முடியும் . ' ' அதாவது , அவருக்கு சாதாரண ஸ்வயம்சேவகனாக இருக்கவே ஆசை . சூழ்நிலை அவரை அவ்வாறு இருக்க விடவில்லை , ஆகவே , சங்கத்தின் தலைவர் என்கின்ற முறையில் அவர் வேலை செய்ய வேண்டியதாயிற்று . அவர் மனதில் இப்படிப்பட்ட ஆசை ஏன் வந்தது ? இவ்வாறு ஏன் எதிர்பார்ப்பு இருந்தது ? அதற்கு ஒரே காரணம் , நமது  இயக்கத்தில் “ சாதாரண ஸ்வயம்சேவக் " ஆவது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்பதுதான் .

     

பரம தயாளனான பாண்டுரங்கன்

தினமும் மாலையில் நீராடி, ஸ்ரீபாண்டுரங்கனைப் பாடி பூஜித்து, பழம்- கற்கண்டுகளை பக்தர்களுக்கு வழங்கி வந்தான். சம்பாதிப்பதில் ஒரு பங்கை உண்டியலில் சேமித்து வைத்து, வருடா வருடம் பண்டரிபுரம் சென்று, விட்டலனுக்கு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம். உண்டியல் பணத்தை எண்ணினான் ராமதேவன். ‘இதில் விட்டலனுக்கு நூல் வேஷ்டியும் அங்க வஸ்திரமும்தான் வாங்க முடியும்’ என வருந்தினான். பிறகு மனதைத் தேற்றியபடி, நூல் வேஷ்டி மற்றும் அங்க வஸ்திரத்தை வாங்கிக் கொண்டு பண்டரிபுரம் நோக்கி நடந்தான்.

ஏழைக்கு இரங்குபவனேவழியில், அழுக்கு வேஷ்டியும் கிழிந்த துண்டுமாய் பெரியவர் ஒருவர் பின்னே வந்தார். ராமதேவனிடம் அவர், ”தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டார். உடனே அவன், ”விட்டலவனை தரிசிக்க பண்டரிபுரம் செல்கிறேன் சாமி” என்றான் உற்சாகத்துடன்.

”அப்படியா! நானும் அங்குதான் செல்கிறேன். பண்டரிபுரம் செல்வதற்கு, குறுக்குப் பாதை ஒன்று உள்ளது. எனக்கு அந்த வழி தெரியும். சந்திரபாகா நதியில் குளித்து விட்டு, மாலையில் விட்டலனை தரிசிக்கலாம்” என்று ராமதேவனை அழைத்தார் பெரியவர். அவனும் சம்மதித்தான். பின்னர் இருவரும் பேசிக் கொண்டே வந்ததில், களைப்பே தெரியவில்லை. பெரியவர் சொன்னபடி மாலை வேளை துவங்கும் முன்பே கோயிலுக்கு அருகில் உள்ள சந்திரபாகா நதிக்கரையை அடைந்தனர்.

பண்டரிநாதனுக்கு சமர்ப்பிப்பதற்காகக் கொண்டு வந்த வஸ்திரத்தை ஒரு பையிலும், தான் குளித்து விட்டு உடுத்திக் கொள்ளும் ஆடையை வேறொரு பையிலுமாக வைத்திருந்தான் ராமதேவன். இரண்டு பைகளையும் கரையில் வைத்து விட்டுக் குளிக்கச் சென்றான். பெரியவரும் நீரில் இறங்கினார்.

தான் அணிந்திருந்த வேஷ்டியை, அங்கு இருந்த கல்லில் அடித்துத் துவைத்து, அலசி, கரையில் காய வைத்தான் ராமதேவன். பெரியவரோ, துவைப்பதற்கு சிரமப்பட்டார். இதை அறிந்த ராமதேவன், அவரது வேஷ்டியை வாங்கித் துவைத்து, நீரில் அலசிப் பிழிந்தான். பிறகு வேஷ்டியை காய வைக்க விரித்தவன், அதிர்ந்து போனான். ஏற்கெனவே கிழிந்திருந்த வேஷ்டி, இப்போது பல இடங்களில் கிழிந்திருந்தது. பெரியவரிடம் மாற்று வேஷ்டி கூட இல்லை.

பெரியவர் அப்போதே சொன்னார் – ‘கடந்த வருடம் அன்பர் ஒருவர் கொடுத்த வேஷ்டி இது. ரொம்பவே கிழிந்து விட்டது. ஜாக்கிரதையாக துவையுங்கள்’ என்று! இப்போது இந்த வேஷ்டி பாழாகி விட்டதே…! குளித்து விட்டு எதை உடுத்துவார்? நம்மிடமும் ஒரே ஒரு மாற்று வேஷ்டிதானே உள்ளது? புதிதாக வேஷ்டி வாங்கித் தரலாம் என்றால் பணமும் இல்லையே? பாண்டுரங்கா… என்ன செய்வது என்று புலம்பினான் ராமதேவன். ”என்ன ராமதேவா! என் வேஷ்டி காய்ந்து விட்டதா?” என்று கேட்டபடி கரைக்கு வந்தார் பெரியவர். இடுப்பில் துண்டு மட்டுமே உடுத்தி இருந்தார்.

”பெரியவரே! உங்கள் வேஷ்டியை அடித்துத் துவைத்ததில், நார்நாராகக் கிழிந்து விட்டது. என்னை மன்னியுங்கள்” என்றான் ராமதேவன். இதைக் கேட்டதும், ”எனது நிலை இப்படியாகி விட்டதே. இப்போது என்ன செய்வது?” என்று கவலைப்பட்டார் பெரியவர்.

”வருந்த வேண்டாம் சுவாமி. பாண்டுரங்கனுக்கு சமர்ப்பிக்கப் புது வேஷ்டியும் அங்கவஸ்திரமும் எடுத்து வந்திருக்கிறேன். இதை உடுத்திக் கொள்ளுங்கள்” என்று பாண்டுரங்கனுக்காக வாங்கிய வேஷ்டி- அங்கவஸ்திரத்தைப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தான் ராமதேவன்.

”அடடா… என்ன காரியம் செய்கிறாய்?” என்று வேஷ்டியை வாங்க மறுத்தார் பெரியவர்.

”பெரியவரே! பாண்டுரங்கனுக்கு பட்டு, பீதாம்பரம் போன்ற விலை உயர்ந்த வஸ்திரங்களை வழங்க பலர் உள்ளனர். கடந்த முறை இதேபோல், சாதாரண நூல் வேஷ்டியும், அங்கவஸ்திரமும் வாங்கி வந்தேன். இதை அணிவிக்க மறுத்து விட்டார் அர்ச்சகர். ‘பாண்டுரங்கனுக்கு பட்டும் பீதாம்பரமும்தான் அழகு. நீ கொண்டு வந்த நூல் வேஷ்டியைக் கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுத்து விட்டுப் போ’ என்று ஏளனமாகப் பேசினார். பிறகு வயதான ஒருவருக்குத் தானமாகக் கொடுத்தேன்.

இப்போதும் அதேபோல் நூல் வேஷ்டி தான் எடுத்து வந்துள்ளேன். இதைப் பார்த்ததும், அந்த அர்ச்சகர் வழக்கம் போல் வேஷ்டியைப் புறக்கணிப்பார். இதற்கு உங்களுக்குக் கொடுக்கலாமே? ஏழையின் சிரிப்பில்தானே ஆண்டவன் இருக்கிறான்” என்றான் ராமதேவன்.

அதன் பின், வேஷ்டியை வாங்கிக் கொள்ளச் சம்மதித்தார் பெரியவர். அத்துடன் ”ராமதேவா! வயதாகி விட்டதால் கைகள் நடுங்குகின்றன. நீயே எனக்கு அணிவித்து விடேன்!” என்றார். அதன்படி வேஷ்டியை அவரது இடுப்பில் கட்டிவிட்டவன், அங்கவஸ்திரத்தை அவரது தோளில் அணிவித்தான். ”ஆஹா! இப்போது நீங்கள், அந்த பண்டரிநாதனைப் போலவே இருக்கிறீர்கள்” என்றான் முகம் மலர. அந்தப் பெரியவர் மெள்ள புன்னகைத்தார். பின்னர் இருவரும் நெற்றியில் திருநாமம் தரித்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றனர். ராமதேவனுக்குப் பின்னே பெரியவர் வந்து கொண்டிருந்தார்.

அன்றைக்கு பாண்டுரங்கனை தரிசிக்க ஏகக் கூட்டம். ராமதேவன் திரும்பிப் பார்த்தான். பெரியவரைக் காணோம். பல இடங்களிலும் தேடினான். ‘சரி… பாண்டுரங்கனை தரிசித்து விட்டு, மீண்டும் பெரியவரைத் தேடுவோம்’ என்று சந்நிதிக்கு வந்தான். அங்கே… ராமதேவன் வாங்கி வந்த நூல் வேஷ்டியையும் அங்கவஸ்திரத்தையும் அணிந்தபடி காட்சி தந்தார் பரம தயாளனான அந்த பாண்டுரங்கன்.

வியப்பில் மூர்ச்சித்து நின்றான் ராமதேவன். ”பகவானே! பெரியவராக என்னுடன் வந்தது நீதானா? பட்டு- பீதாம்பரத்தை ஏற்கும் அர்ச்சகர்கள், குறைந்த விலையில் உள்ள வேஷ்டியையும், அங்கவஸ்திரத்தையும் அணிவிக்க மாட்டார்கள் என்று நேராக என்னிடமே வந்து, என் கையாலேயே உனக்கு அணிவிக்கும் பாக்கியத்தையும் வழங்கி விட்டாய். என்னே உன் கருணை…” என்று பாண்டுரங்கனை விழுந்து வணங்கினான் ராமதேவன்.


Sunday, 15 March 2020

ராமாயணத்திலும் குசேலன்

ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை, நம்மில் பலருக்குத் தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை.

ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர்…அனந்தன்

ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் வித்யாப்பியாஸம் செய்துகொண்டிருந்தான். அப்போது அவனுக்கு உற்ற நண்பன் ஒருவனும் இருந்தான். அவன் பெயர் அனந்தன். பரம ஏழையான அவன், வசிஷ்டரின் ஆசிரமத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான்.

குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஸ்ரீராம- லட்சுமண சகோதரர்களுக்குத் தொண்டு செய்வதில், அனந்தன் பேரானந்தம் கொண்டான். குறிப்பாக, ஸ்ரீராமன்மீது அவன் வைத்த பற்றும் பாசமும் அளவுகடந்ததாக இருந்தது. பதிலுக்கு அனந்தனிடம் ஸ்ரீராமனும் பேரன்பு காட்டினான். இருவரும் சேர்ந்து ஆனந்தராமனாக குருகுலத்தில் விளங்கினர்.

ஸ்ரீராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல், எழுத்தாணியைக் கூராக்குதல், வில்லைத் துடைத்தல், அஸ்திரங்களை எடுத்து வைத்தல், உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளை பெருமகிழ்ச்சியோடு செய்து வந்தான் அனந்தன். 

ஸ்ரீராமனை ஒருநாள் காணவில்லை என்றாலும், அவன் மனம் ஏங்கித் தவிக்கும். ‘சுதாமனும் கண்ணனும் போல’ வசிஷ்டருடைய குருகுலத்தில் அனந்தனும் ஸ்ரீராமனும் நட்பு கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வனத்துக்குச் சென்று, தர்ப்பைப் புல் பறித்து வரவேண்டியது அனந்தனின் கடமை. அதுபோல் ஒருமுறை அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்தான். அந்த நேரத்தில் ஸ்ரீராமனின் குருகுலம் முடிந்து, குருவிடம் விடைபெற்று சகோதரர்களுடன் அயோத்திக்குச் சென்றுவிட்டான். வனத்தில் இருந்து திரும்பி வந்த அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான். 

உடனே ஸ்ரீராமனைக் காண அவன் மனம் துடித்தது. உடனே புறப்பட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீராமனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே அவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போதுதான் மகரிஷி விஸ்வாமித்திரருடன் ஸ்ரீராமனும் லட்சுமணனும் யாக சம்ரக்ஷணத்துக்காக வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். 

துக்கம் அனந்தனின் தொண்டையை அடைத்தது. ஒன்றும் அறியாத பாலகனான ஸ்ரீராமன் கானகம் செல்ல நேர்ந்ததை எண்ணிக் கலங்கினான். ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பிய தசரதனையும், அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரரையும் மனத்துக்குள் கடிந்துகொண்டான்.

பாவம் ஸ்ரீராமன்! காட்டில் அவன் என்ன செய்வான்? அவனுக்கு யார் சேவை செய்வார்கள்? நித்திய கர்மங்களுக்கு தர்ப்பை, சமித்து போன்றவற்றை யார் சேகரித்துத் தருவார்கள்? இப்படியெல்லாம் அவன் மனம் தவித்தது. எப்படியும் ஸ்ரீராமனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான் அனந்தன். 

தன் குரு வசிஷ்டரிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல், நேராகக் காட்டை நோக்கிச் சென்றான். அடர்ந்த காட்டில், ‘ராமா… ராமா…’ என்று கதறிக்கொண்டு, ஸ்ரீராமனைத் தேடி அலைந்தான். காட்டில் வழி தவறி, ஒரு இருண்ட பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்டான். அங்கே… பல நாட்கள் ஸ்ரீராமனைத் தேடியும், அவனைக் காணாமல் அனந்தனின் மனம் வாடியது. ஸ்ரீராமனைக் காணாமல் ஊர் திரும்பவும் அவனுக்கு விருப்பமில்லை. ‘ராமா… ராமா…’ என்று ஜபித்துக்கொண்டு, அன்ன ஆகாரமின்றி, அந்தக் காட்டிலேயே ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்தான். அவன் அமர்ந்த இடத்தில், அவனை மூடியவாறு புற்று வளர்ந்துவிட்டது. ஆனால், அவனது ‘ராம’ ஜபம் மட்டும் நிற்கவில்லை.

காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. இதற்கிடையில், ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நிகழ்ந்து முடிந்திருந்தன. விஸ்வாமித்திரரின் யாகத்தை முடித்துக் கொடுத்து, சீதையை மணம் முடித்து, தந்தை சொல் காக்கக் கானகம் சென்று, சீதையைப் பிரிந்து, அனுமனின் உதவியால் அவள் இருக்கும் இடம் அறிந்து, இலங்கை சென்று ராவண சம்ஹாரம் செய்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியிருந்தான் ஸ்ரீராமன். அவன் பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இத்தனை நடந்ததும், அது எதுவும் தெரியாமல் புற்றுக்குள் ‘ராமா… ராமா..’ என்று தவமியற்றிக்கொண்டிருந்தான் அனந்தன்.

ஸ்ரீராமனின் பட்டாபிஷேகத்தைக் காண பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களும், மன்னர்களும், மகரிஷிகளும் அயோத்திக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது காட்டு வழியே சென்று கொண்டிருந்த சில மகரிஷிகள் ‘ராம’ நாமத்தைப் பாடிக்கொண்டே சென்றனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு அனந்தன் தவமியற்றிக்கொண்டிருந்த புற்று இடிந்தது. அனந்தன் தவம் கலைந்து எழுந்தான். ‘ராமா… ராமா… எங்கிருக்கிறாய் என் ராமா?’ என்று கதறினான். 

காலச் சுழற்சியினால் தனக்கு வயதாகியிருப்பதைக்கூட அவன் அறியவில்லை. பல ஆண்டுகள் முடிந்துபோனதையும் அவன் உணரவில்லை.

இன்னும் குழந்தைபோல ஸ்ரீராமனைத் தேடினான். அப்போது மகரிஷிகள் கூட்டத்தில் ஒருவர், அவன் யாரென்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனுக்கு ஆறுதல் கூறினார். ஸ்ரீராமன் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதையும், அதற்காகவே எல்லோரும் அயோத்தி செல்வதையும் அனந்தனுக்குத் தெரிவித்தார். ராமனுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கேட்டு கண்ணீர் வடித்தான் அனந்தன். இருந்தாலும், ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போகும் செய்தி அறிந்து, அதைக் காண மகரிஷிகளுடன் அயோத்தி புறப்பட்டான்.

அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று பட்டாபிஷேக நாள். எங்கும் வேத கோஷமும், மங்கல இசையும் முழங்கிக்கொண்டிருந்தன. குல குரு வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முதலானோர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருந்தனர். மக்கள், மன்னர்களுடன், தேவர்களும் தேவ மாதர்களும் அங்கே வந்திருந்தனர்.

ஸ்ரீராமன் அதிகாலையிலேயே மங்கல நீராடி, ஆடை அணிகலன்கள் அணிந்து, தன் குலதெய்வமான சூரிய தேவனையும், தாயார் மூவரையும் வணங்கி, கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான். அப்போது எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும் வகையில் உரத்த குரலில், ”அடே ராமா! இத்தனை காலம் எங்கிருந்தாயடா? உன்னை எத்தனை காலமாய் தேடுகிறேனடா?” என்று குரல் கொடுத்தபடியே ராமனை நோக்கி ஓடி வந்தான் அனந்தன்.

 ராமனை இறுகத் தழுவிக் கொண்டான்.
கந்தல் உடையில், ஜடா முடியுடன் பரதேசிக் கோலத்தில் பாமரன் ஒருவன், ‘அடே ராமா’ என்று கூவி அழைத்தது கண்டு, அவையினர் அதிர்ச்சியுற்றனர். ‘எவனோ பைத்தியக்காரன் இவ்வாறு செய்கிறான்’ என்று கோபத்துடன் காவலர்கள் அவனைப் பிடித்திழுக்க விரைந்தபோது, ஸ்ரீராமன் அனந்தனை நெஞ்சாறத் தழுவி, அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, ”என்னை மன்னித்துவிடு அனந்தா!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.

”உன்னிடம் சொல்லிக்கொள்ளாமலே குருகுலத்தில் இருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம் அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன். என் தவற்றை மன்னித்துவிடு” என்று மீண்டும் சமாதானம் செய்தான். அதைக் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டனர். தன்னைப் போலவே தன் பிரபுவிடம் பக்தி செலுத்தும் மற்றொரு பக்தன் இருக்கிறான் என்றெண்ணிப் பூரித்த அனுமனின் கண்களிலும் நீர் சுரந்தது.

அப்போது வசிஷ்டர், ”ராமா… இவர் யார்?” என்று கேட்க, ”தெரியவில்லையா குருதேவா? இவன் என் பள்ளித் தோழன். தங்கள் குருகுலத்தில் சேவை செய்த சீடன் அனந்தன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப் ‘பிரபு’ என்றும் ‘மகாராஜா’ என்றும்தான் அழைக்கிறார்கள். என்னை ‘அடே ராமா’ என்று அழைக்க என் தந்தை தசரதன் இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன் மூலம் என் தந்தைக்கு நிகரானவன் ஆகிவிட்டான் இந்த அனந்தன்!” என்று கூறினான் ஸ்ரீராமன். வசிஷ்டரும் அனந்தனைக் கட்டித் தழுவி ஆசீர்வதித்தார். எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!

”இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து, இடையறாமல் என் நாமத்தை ஜபித்து, என்னைத் தேடிக் கண்டடைந்த இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறிய ஸ்ரீராமன் அனுமனை நோக்கி, ‘உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கௌரவம் தரலாம்?” என்று கேட்டான்.

”பிரபு! தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என்று கூறினீர்கள். தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு, இவரை அதில் அமர்த்தி மரியாதை செய்வது இவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை!” என்று கூறினான் அனுமன். எல்லோரும் அதை ஆமோதித்தனர்.

இத்தனை பெரிய மரியாதைக்குத் தான் தகுதியானவனா என்றெண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். அவன் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்து, பாத பூஜையும் செய்தான் ஸ்ரீராமன். அதன் பின்பே, ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் ஆரம்பமானது.

ராமாவதாரத்தில் பகவானின் அன்பினால் கட்டுண்டு ஆனந்தமடைந்த அனந்தனே, ஒருவேளை அதே பேரானந்தத்தை மீண்டும் அனுபவிக்க கிருஷ்ணாவதாரத்தில் குசேலனாக வந்தானோ என்று தோன்றுகிறது அல்லவா?!

ஸ்ரீ ராம ! ஜெய ராம !
 ஜெயஜெய ராமா !