பாடல் எண் : 4
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.
பொழிப்புரை :
வளைந்த புருவங்களையும் , கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும் , கங்கையால் ஈரமான சடைமுடியையும் , பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும் , பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும் .
குறிப்புரை :
குனித்த - வளைத்த . கொவ்வைச் செவ்வாய் - கோவைப் பழம் போலுஞ் செய்ய திருவாய் . குமிழ் சிரிப்பு - புன்னகை . ` வளர்குமிழ் மலரும் ` ( கோயிற் புராணம் நடராசச் . 14) என்றதால் , மலரது முன்னிலையான அரும்பைக் குமிழ் எனல் புலப்படும் . படவே , அரும்பும் நகையைக் குமிழ் சிரிப்பு என்பர் . ` குமிண் சிரிப்பு ` என்றதிற் குமிண் என்றது முதனிலையாதல் வேண்டும் . அவ்வாறொன்று தமிழில் வேறெங்கும் காணப்படவில்லை . ` முறுவலிப்பு ` ( தி .4 ப .81 பா .7). பனித்த சடை - கங்கை நீராற் குளிர்ந்த சடை . ` பவளம் போல் மேனி : ( தி .4 ப .112 பா .1) ` பேரொளிப்பவள வெற்பென ... ... வீற்றிருந்த வள்ளலார் ( தி .12 பெரிய . அப்பர் . 379) பால்வெள் நீறு - பால் போலுந்திரு வெண்ணீறு :- ` செய்ய திருமேனி வெண்ணீறாடி ` ( தி .6 ப .9 பா .7) இனித்தம் - இனிதாந்தன்மை . இனிது அம் . பேரின்பம் தரும் தூக்கிய திருவடி , ` வ + தனம் ` . வகாரமாகிய சென்றடையாத திரு ( துறைசையமகவந்தாதி 100). காணப்பெற்றால் :- பெற லரி தென்றது . மனித்தப்பிறவி . ` மனித்தனாகிய பூழியன் ` ( தடாதகை . திருவவ . 64) ` மனித்தருக்கரசு ` ( ? திருமணப் , 199) எனப் பரஞ்சோதி முனிவர் வாக்கிற் பயின்றுளது இச்சொல் . ` பொல்லா மனித்தர் ` என்றாருமுளர் . மன்றாடுந் திருக்காட்சி கிடைக்கப்பெறின் , வேண்டா என வெறுத் திழிக்கும் பிறவியும் வேண்டும் எனும் உயர்வுடையதாகும் . ` மருவாகி நின்னடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு காற் பிறப்பு உண்டேல் , மறவாவண்ணம் திருவாரூர் மணவாளா திருத்தெங்கூராய் செம் பொனேகம்பனே திகைத்திட்டேனே `. ` மேலும் இப்பூமிசை இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே ` ` வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடுமின் ` ` திருநாவுக்கரசர் தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் ` ( தி .12 பெரிய புராணம் அப்பர் 312) ` மண்ணில் இருவினைக்குடலாய் வான் நிரயத் துயர்க்குடலாய் எண்ணிலுடல் ஒழிய முயல் அருந்தவத்தால் எழிற்றில்லைப் புண்ணிய மன்றினில் ஆடும்போது செய்யா நடம் காண நண்ணும் உடல் இது அன்றோ நமக்குடலாய் நயந்த உடல் ` ` மறந்தாலும் இனி இங்கு வாரோம் என்று அகல்பவர் போல் , சிறந்தார நடம் ஆடும் திருவாளன் திருவடிகண்டு இறந்தார்கள் பிறவாத இதில் என்ன பயன் ? வந்து பிறந்தாலும் இறவாத பேரின்பம் பெறலாம் ஆல் `. ` ஓதல் உறு மருந்தில்லை யொழியவொரு மருந்தில்லை `. ( கோயிற் புராணம் ) ` எவ்வுடல் எடுத்தேன் மேல்நாள் எண்ணிலாப் பிறவி தோறும் அவ்வுடல் எல்லாம் பாவம் அறம் பொருட்டாகும் அன்றோ தெவ்வுடல் பொடித்தாய் உன்றன் சேவடிக்கு அடிமை பூண்ட இவ்வுடல் ஒன்றே அன்றோ எனக்கு உடலானது ஐயா !` ( திருவிளையாடல் விடையிலச்சினை . 16). ` ஆலவாயுடையார் புகழ் பாடப்பெறுவேமேல் வேண்டுவதிம் மனித யாக்கை ( ? . திருவால வாயானபடலம் . 1) ` விரைவிடை யிவரும் நினைப்பிறவாமை வேண்டுநர் வேண்டுக மதுரம் பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும் பிறவியே வேண்டுவன் தமியேன் ` ( சோணசைலமாலை ). ` இந்த மாநிலத்தே ` ( தி .4 ப .106 பா . 2 - 3.).
அப்பர் பெருமான் பொற்கழல் போற்றி! போற்றி !!
No comments:
Post a Comment